காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு கட்டடங்கள், நுாலகம், ஊராட்சி அலுவலகம்
போன்ற பல வகையான அரசு கட்டடங்கள் திறக்கப்படாமல், மக்கள் பயன்பாட்டுக்கும்
வராமல் உள்ளன. இதனால், மக்கள் வரிப்பணம் கோடிக்கணக்கில்
வீணடிக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்டப்படும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கழிப்பறை கட்டடம், உடற்பயிற்சி கூடம் போன்றவை பல்வேறு அரசு நிதியில் கட்டப்படுகின்றன.
சில கட்டடங்கள் நேரடி அரசு நிதியாகவும், ஊரக வளர்ச்சித்துறை நிதியிலும், எம்.எல்.ஏ., நிதி என பல வகையான நிதி ஆதாரம் வாயிலாக கட்டப்படுகின்றன.
அவ்வாறு கட்டப்படும் பல அரசு அலுவலகங்கள் உடனடியாக திறக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
விஷ ஜந்துக்கள்
ஆனால், அரசியல் காரணங்களாலும், அதிகாரிகளின் மெத்தன போக்கு காரணமாக பல அலுவலகங்கள் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாக அப்படியே கிடக்கின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அரசு அலுவலகங்கள் பல, பாம்புகளும், விஷ ஜந்துக்களும் உலாவும் இடமாக மாறி வருகிறது.
அரசு அலுவலகங்களுக்கு புதிதாக கட்டடம் கட்ட, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை போன்ற துறைகள் முன்கூட்டியே கருத்துருக்கள் தயாரித்து, மதிப்பீடு செய்து, டெண்டர் விடப்பட்டு அதன்பிறகு கட்டுமான பணிகள் நடக்க பல மாதங்களாகின்றன.
அவ்வாறு பல கட்ட போராட்டத்துக்கு பிறகு கட்டப்படும் அரசு அலுவலகங்களை, திறப்பதில் கூட பல மாதங்கள் இழுத்தடிப்பது பொதுமக்களிடையேயும், அரசு அதிகாரிகளிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில் உள்ள நேரு கிளை நுாலக கட்டடம் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலும், அண்ணா நினைவு நுாற்றாண்டு பூங்காவில் 25 லட்சத்தில் உடற்பயிற்சி கூடமும், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது.
அதிர்ச்சி
இந்த இரு கட்டடங்களும் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாக அப்படியே கிடக்கிறது. இந்த இரு கட்டடங்களும் எப்போது திறக்கப்படும் என, மாநகராட்சி மற்றும் நுாலகத்துறை அதிகாரிகளுக்கே தகவல் தெரியாமல் உள்ளது.
காணொலி காட்சி வாயிலாக பல அரசு அலுவலகங்களும், விடுதி, மேம்பாலம் போன்றவற்றை முதல்வர் ஸ்டாலின் திறந்து வருகிறார்.
அவ்வாறு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் திறக்கப்படாத அரசு கட்டங்களை எளிமையாக திறக்க வாய்ப்புகள் இருந்தும், பல அரசு கட்டடங்கள் அப்படியே வீணாக கிடக்கின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 20க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் வாடகை கட்டடத்தில் இயங்குகின்றன. போதிய இட வசதி இன்றி இயங்கும் அரசு அலுவலகங்கள் பல, சொந்த கட்டடம் இல்லாமல் தவிக்கின்றன.
ஆனால், புதிதாக கட்டி முடிக்கப்பட்டும், திறப்பு விழா கூட நடத்தாமல், பல அரசு அலுவலகங்கள் உள்ளது, பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
l
ஸ்ரீபெரும்புதுார் கோட்டாட்சியர் அலுவலகம் வி.ஆர்.பி.சத்திரம் பகுதியில், 39 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு மூன்று மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லைl காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,எழிலரசன் தொகுதி நிதியில், 30 லட்சம் ரூபாய் செலவில், பெரிய காஞ்சிபுரம் நுாலக கட்டட பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் நுாலகம் திறக்காமல் உள்ளதுl
காஞ்சிபுரம் அண்ணா நினைவு நுாற்றாண்டு பூங்காவில், காஞ்சிபுரம் தி.மு.க.,-- எம்.எல்.ஏ., எழிலரசன் தொகுதி நிதியில், 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடித்த உடற்பயிற்சி கூடம் ஆண்டு கணக்கில் திறக்கப்படாமல் உள்ளதுl
ஸ்ரீபெரும்புதுாரில் 7.24 கோடி ரூபாய் மதிப்பில், ராமானுஜர் மணி மண்டபம், வேதபாட சாலை, மாணவர் தங்கும் விடுதி, அன்னதான கூடம், ராமானுஜர் வரலாற்று தகவல் மையம், நுாலகம், ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு குறித்த குறும்படத்தை பொதுமக்களுக்கு காட்சிபடுத்தும் அரங்கம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லைl
குன்றத்துார் ஒன்றியம் படப்பையில் தேசிய கிராம சுயாட்சி திட்ட நிதியின் கீழ், 2018-- 19 நிதியாண்டில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி அலுவலக கட்டடம் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறதுl
காஞ்சிபுரம் கலெக்டர் முகாம் அலுவலகம் பின்புறம், கோட்டாட்சியர் குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகிறது. கோட்டாட்சியர் பயன்பாட்டுக்கு, அந்த கட்டடம் இதுவரை வரவில்லைl குன்றத்துார் பேரூராட்சி மேத்தா நகரில், குன்றத்துார் தாலுகா அலுவலகம் புதிதாத கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளதுl
குன்றத்துார் ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சி காந்தி நகரில், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில், 18 லட்சத்து 48 ஆயிரத்து 652 ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட குடிநீர் மேல் நிலைத்தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளதுl
குன்றத்துார் ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சியில் உள்ள தர்மேஸ்வரர் கோவில், தொல்லியல் துறை சார்பில் 20 லட்சம் ரூபாய் நிதியில் புனரமைப்பு பணிகள் 2019 ல் முடிந்தது. நான்கு ஆண்டுகளாகியும் கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளது.