புதுப்பேட்டை, சென்னை, புதுப்பேட்டை சிலம்பு நகரில் நேற்று முன்தினம், சந்தேகப்படும் வகையில் சாலையோரம் கார் ஒன்று நின்றுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்படி வந்த புதுப்பேட்டை போக்குவரத்து போலீசார், கார் கண்ணாடி வழியே பார்த்தனர்.
அதில், வாலிபர் ஒருவர் பின் இருக்கையில் துாங்குவது தெரிந்தது. காரில் பல முறை தட்டியும் அவர் எழவில்லை. உடனே, போலீசார் மற்றும் மக்கள் சேர்ந்து, காரின் இருபுறம் நின்று மாறி மாறி அசைத்தனர்.
திடீரென விழித்த அந்த வாலிபர், தள்ளாடியபடி காரிலிருந்து இறங்கினார். அவர் மது போதையில் இருந்தாரா என அறிய, 'பிரீத் அனலைசர்' கருவியில் ஊத போலீசார் அறிவுறுத்தினர்.
அதற்கு அந்த போதை வாலிபர், 'நான் குடித்து விட்டு வாகனம் ஓட்டவில்லை. கார் ஓட்டிவிட்டு தான் குடித்தேன்' எனக் கூறி, ஊத அடம் பிடித்தார்.
அப்போது, வெறிச்சோடி காணப்பட்ட சாலையில், போக்குவரத்தை சீர் செய்யும் பணியிலும் ஈடுபட்டு அலப்பறை செய்ததுடன், போலீஸ் வாகனத்தையும் எடுக்கும்படி கூறினார்.
இந்த 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.