திருப்பூர்:'எமிஸ்' இணையதளத்தில் 'சர்வர்' பிரச்னை நீடிப்பதால், திருப்பூர் மாவட்டத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் ஆமை வேகத்தில் நடக்கிறது. ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
புதிய கல்வியாண்டு (2023 - 2024) துவங்க இன்னமும் பத்து நாட்கள் மட்டுமே உள்ளதால், கவுன்சிலிங் மூலம் ஆசிரியர் பணியிட மாற்ற பணி துவங்கி நடந்து வருகிறது. மாவட்டத்துக்குள் மாறுதல் நிறைவடைந்த நிலையில், கடந்த, 19 ம் தேதி முதல் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்ட கவுன்சிலிங் நடக்கிறது.
ஒன்பது தாலுாகாவில் பாட வாரியாக, 800 க்கும் அதிகமான ஆசிரியர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்றுள்ளனர். ஆசிரியர் கவுன்சிலிங், இடமாற்ற விபரங்களை அப்டேட் செய்யும் எமிஸ் இணையதள வேகம் குறைவாக உள்ளது. காலை, 10:00 மணிக்கு வரும் ஆசிரியர்கள், மாலை, 4:00 மணியை தாண்டிய பின்பும் காத்திருக்க வேண்டியுள்ளது.
ஆசிரியர்கள் கூறியதாவது:
கலை, அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுக்கு, 17க்கும் அதிகமான பாடங்கள் உள்ளது. 867 ஆசிரியர்கள் இடமாறுதல் ஒப்புதல் வழங்க வேண்டும். கவுன்சிலிங் துவங்கிய நாள் முதல் (19 ம் தேதி) மூன்று நாட்களில், 200க்கும் குறைவானவர்களுக்கு, ஒப்புதல் கிடைக்க பெற்றுள்ளது. இப்படியே சென்றால், கல்வியாண்டு துவங்கும் வரை கவுன்சிலிங் நடத்த வேண்டி இருக்கும். சர்வர் பிரச்னைகளை கலைந்து கவுன்சிலிங் வேகப்படுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'கவுன்சிலிங் இணையதளம் வேகம் குறைவாக உள்ளது குறித்து, தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் மூலம் சென்னைக்கு தகவல் தெரிவித்துள்ளோம். மாநிலம் முழுதும் இன்று (நேற்று) இதே நிலை இருப்பதாக பதிலளித்தனர். சர்வர் வேகத்தை அதிகரிக்க, சீராக இயக்க தொடர்ந்து கேட்டு வருகிறோம்,' என்றனர்.
பிளஸ் 1, பிளஸ் 2 மேல்நிலை கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களே முதுகலை ஆசிரியர்கள். இவர்கள் கவுன்சிலிங் முடிந்து பள்ளிகளுக்கு திரும்பாததால், பிளஸ் 1 அட்மிஷனுக்கான பணிகள் பல பள்ளிகளில் முழுமையாக இன்னமும் துவங்காமல் உள்ளது. பெற்றோர் மற்றும் மாணவர் வரும் போது,' இன்று போய் நாளை வாருங்கள்; ஆசிரியர் கவுன்சிலிங் சென்றிருக்கின்றனர்' எனக்கூறி, பள்ளி பணியாளர்கள் அனுப்பி வைக்கின்றனர்.