கோவை;விருதுநகரில் நடந்த மாநில அளவிலான ஜூனியர் கூடைப்பந்து போட்டியின் சிறுவர் மற்றும் சிறுமியர் இரண்டு பிரிவுகளிலும், கோவை மாவட்ட அணி முதலிடம் பிடித்தது.
தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் விருதுநகர் மாவட்ட கூடைப்பந்து கழகம் இணைந்து, 16 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவியருக்கான, 'யூத் மாநில கூடைப்பந்து சாம்பியன்ஷிப்' போட்டியை, விருதுநகர் காமராஜ் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் ஆர்.ஜே., மந்த்ரா பள்ளி மைதானங்களில் நடத்தின.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 80 அணிகள் பங்கேற்றன. இதில் கோவை மாவட்டம் சார்பில் சிறுவர் மற்றும் சிறுமியர் அணிகள் பங்கேற்றன.
மாணவர் பிரிவு இறுதிப்போட்டியில், கோவை அணி திருவள்ளூர் மாவட்ட அணியை, 95 - 92 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி, முதலிடத்தை பிடித்தது.
மாணவியர் பிரிவில், கோவை மாவட்ட அணி 91- 61 என்ற புள்ளிக்கணக்கில் மயிலாடுதுறை மாவட்ட அணியை வீழ்த்தி, சாம்பியன் கோப்பையை வென்றது.
மாநில அளவிலான போட்டியில், சிறுவர் மற்றும் சிறுமியர் இரண்டு பிரிவுகளிலும் ஆதிக்கம் செலுத்தி கோப்பையை வென்ற கோவை மாவட்ட வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களை, கோவை மாவட்ட கூடைப்பந்து கழக நிர்வாகிகள் பாராட்டினர்.