சென்னை: அரசு முறைப் பயணமாக, முதல்வர் ஸ்டாலின் இன்று, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்குச் செல்கிறார்; தொழில் துறை அமைச்சர் ராஜா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் செல்கின்றனர்.
இன்று காலை 11:25 மணிக்கு, 'ஏர் இந்தியா' விமானத்தில், சிங்கப்பூர் செல்லும் முதல்வர், அந்நாட்டின் போக்குவரத்து, தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரன், சட்டத் துறை அமைச்சர் சண்முகம், அந்நாட்டின் முன்னணி தொழில் நிறுவன அதிபர்கள் ஆகியோரை சந்திக்க உள்ளார்.
இன்று மாலை நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில், சிங்கப்பூர் பல்கலை, சிங்கப்பூர் - இந்தியா கூட்டாண்மை அமைப்பு, சிங்கப்பூர் இந்தியா தொழில் வர்த்தக கூட்டமைப்பு ஆகியவற்றுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளன.
பின், ஜப்பான் செல்லும் முதல்வர், அந்நாட்டு முன்னணி தொழில் துறைத் தலைவர்களையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கவும், தமிழகத்தில் முதலீடு செய்ய வரும்படியும் அழைப்பு விடுக்க உள்ளார்.
ஒசாகா நகர்வாழ் தமிழர்கள் அழைப்பை ஏற்று, முதல் முறையாக, முதல்வர் தலைமையிலான குழு, அங்கு செல்ல உள்ளது.
'தமிழகத்துக்கும் ஜப்பானுக்கும் இடையே, நீண்ட நெடிய வரலாற்று உறவு இருந்து வருகிறது. இந்த உறவு மேலும் வலுவடையும் வகையில், இந்த பயணம் அமையும்' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.