சென்னை: நுகர்வோர் நீதிமன்றங்களில், 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே, வழக்குகள் தாக்கல் செய்யும் நடைமுறை, ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது.
'மாநில அளவில், போதிய பயிற்சி முகாம்கள் நடத்தப்படாமல், திடீரென புதிய முறையை செயல்படுத்துவது, நிர்வாக பணிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்' என, வழக்கறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.
மத்திய, மாநில அரசு சேவைகள், 'ஆன்லைன்' வாயிலாக எளிதாக கிடைப்பதை உறுதி செய்ய, 'டிஜிட்டல் இந்தியா' என்ற திட்டம், 2015 ஜூலை 1ல் துவங்கப்பட்டது.
மத்திய, மாநில அரசுகளின் கீழுள்ள துறைகள், மக்களுக்கு வழங்கும் சேவைகள், மின்னணு முறையில் கிடைக்கும் வசதிகள் செய்யப்படுகின்றன.
அந்த வரிசையில், மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை, ஜூன் 1 முதல் மாநில, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் வழக்குகளை, மின்னணு முறையில் மட்டுமே தாக்கல் செய்வதை கட்டாயமாக்கி உள்ளது.
நுகர்வோர் நீதிமன்றங்களில், ஊழியர்கள் பற்றாக்குறை, அடிப்படை கட்டமைப்பு இன்மை போன்ற பல்வேறு பிரச்னைகள் இருக்கும் நிலையில், 'இ - -பைலிங்' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தாமல், உடனே அமல்படுத்துவது, நிர்வாக பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்கின்றனர், வழக்கறிஞர்கள்.
அதன் விபரம்:
வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷ்: 'ஆன்லைன்' நடைமுறை வரப்பிரசாதம். ஆனால், நுகர்வோர் நீதிமன்றங்களில், ஏற்கனவே நிலவும் பிரச்னைகளுக்கு, இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.
வழக்கு போடுபவர்களில் பலர், சாதாரண மக்கள்.
அவர்களுக்கு, முதலில் இந்த நடைமுறை குறித்து புரிய வைக்க வேண்டும். அதற்கான முயற்சியை மேற்கொள்ளாமல், திடீரென ஒன்றை புகுத்துவது அன்றாட நிர்வாக பணிகளில் சுணக்கத்தை ஏற்படுத்தும்.
புதிய நடைமுறை, எந்த விதத்திலும் சாதாரண மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது.
வழக்கறிஞர் ஆ.பிரம்மா: நுகர்வோர் நீதிமன்றங்களில், வழக்கு 'வாய்தா' விபரங்களை கூட சரியான நேரத்தில் அறியும் வசதி கிடையாது. அடிப்படை கட்டமைப்பு போதியளவில் இல்லை.
மாநில அளவில் பயிற்சி அளிக்காமல், திடீரென ஆன்லைன் முறையை அமல்படுத்துவது சரியல்ல. வழக்கறிஞர்கள், வழக்காடிகள் என, அனைவருக்கும் அசவுகரியத்தை ஏற்படுத்தும்.
முதலில் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டு, ஆன்லைன் வசதியை கொண்டு வர வேண்டும். ஏற்கனவே, 'அவுட்சோர்சிங்' முறையில் தான் நிர்வாக பணிகள் நடக்கின்றன.
போதிய பயிற்சியின்றி, நேரடியாக ஆன்லைன் முறையை கொண்டு வந்தால், அன்றாட பணிகள் பாதிக்க வாய்ப்புண்டு.
இதை பயன்படுத்தி, தரகர்கள் தலையீடு அதிகரிக்கும் வாய்ப்பும் ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.