'அப்பப்பா, என்னா வெயிலு,'' என சலித்துக் கொண்டபடியே வீட்டுக்குள் நுழைந்த மித்ரா, ஜாலியாக டிவியில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த சித்ராவிடம், 'வாழ்ந்தா இப்படியொரு வாழ்க்கை வாழணும், நமக்குத்தான் அந்த கொடுப்பினை இல்லையே,' என்று கமென்ட் அடித்தபடியே சோபாவில் உட்கார்ந்தாள்.
''உன் சவுகர்யத்துக்கு வந்த கொறச்சல கொஞ்சம் சொல்லு, நானும்தான் கேட்கிறேன்,'' என்று வாயை கிளறினாள் சித்ரா.
''ஒண்ணுமில்லக்கா... நம்ம ஊர்ல விஜிலன்ஸ் போலீஸ் பிரிவு ஒண்ணு இருக்குது. அதிகாரிகள், ஆள் படை பரிவாரம் எல்லாம் ஜம்முனு இருக்குது. என்ன பிரயோஜனம், இந்த வருஷத்துல இதுவரைக்கும் ஒரே ஒரு கேஸ் தான் போட்ருக்காங்கப்பா.
நாட்டுல லஞ்சம் கொறஞ்சு போயிடுச்சா, இல்ல லஞ்சம் வாங்குறவங்க எல்லாம் திருந்திட்டாங்களா என்னான்னு அவங்க தான் விளக்கணும்.
இத்தனைக்கும் அவங்க ஆபீஸ் பக்கத்துலயே இருக்குற, வருவாய் கோட்டாட்சியர் ஆபீஸ்ல ஏகப்பட்ட அட்டூழியம் நடக்குது. லஞ்சம் வசூலிக்கிறதுக்கு தனியா, ஒரு ஆளே நியமிச்சு இருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.
''சரி சரி, சொல்லிட்ட இல்ல விடு, பாத்துக்குவாங்க. நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா, சிட்டி போலீஸ் அதிகாரிங்க எல்லாம் ஒட்டு மொத்தமா கடுப்பாகுற மேட்டர்,'' என்று பீடிகையுடன் தொடங்கினாள் சித்ரா.
''சமீபத்துல, ரவுடிகளுக்கு உதவி செஞ்சதா சொல்லி, வக்கீல் ஒருத்தர், போலீஸ் ஒருத்தர்னு ரெண்டு பேரை அரஸ்ட் பண்ணாங்க. அவரு மேல சந்தேகம் வந்த உடனே போலீஸ்ல, அவரோட போன் அழைப்பு ரெக்கார்ட்ஸ் எல்லாத்தையும் ஆய்வு பண்ணாங்க.
இதுல அவரு ரவுடிகளோட சர்வ சாதாரணமா போன்ல, வாட்ஸ்அப்ல பேசினது தெரியவந்துச்சு. இதுல விசேஷம் என்னன்னா, போலீஸ் அதிகாரிகள் அத்தனை பேரையும் ஏகவசனத்துல பேசுனது தான். இதைக்கேட்டதும் அதிகாரிகள் எல்லாம் கொந்தளிச்சுட்டாங்க,'' என்று முடித்தாள்.
''அடப்பாவமே,'' என்ற மித்ரா, ''சரி, இத்தனை நாளா அந்த போலீஸ்காரர் மேல யாருக்குமே சந்தேகம் வரலையா, ரொம்ப ஆச்சர்யம் தான்,'' என்று கேட்டாள்.
''கரெக்டா கேட்டே... அவரு பல வருஷமா இதே வேலையத்தான் செஞ்சிருக்காரு. அவரு தப்புனதுக்கு காரணம், முந்தின ஆட்சில, மாஜி அமைச்சருக்கு ரொம்ப விசுவாசமா இருக்கிறா மாதிரி சீன் போட்டது தானாம்.
இப்போ என்னடான்னா, மாஜி அமைச்சரையும் தான் தாறுமாறா பேசி இருக்கார்னு, அவரோட போன் ரெக்கார்ட்ஸ் எல்லாத்தையும் வாட்ச் பண்ணுன அதிகாரிங்க தலையில அடிச்சுக்குறாங்க,'' என்றாள் சித்ரா.
''சரி விடு, உப்பு தின்னவங்க தண்ணி குடிக்கட்டும்,'' என்ற மித்ரா, ''நம்ம சிட்டிக்குள்ள கட்டுமான வேலை செய்ற படா கம்பெனிக்காரங்க பாடு, பெரும் திண்டாட்டம் ஆயிடுச்சுன்னு ஒரு தகவல் இருக்கு தெரியுமாடி உனக்கு,'' என்று தொடங்கினாள்.
''சொல்லு... சொல்லு,'' என்ற சித்ரா, ஆர்வத்துடன் காதை தீட்டிக்கொண்டு உட்கார்ந்தாள்.
''ஒரு கட்டுமான கம்பெனிக்காரங்க, சிட்டிக்குள்ள பெரிய பட்ஜெட்ல, அபார்ட்மென்ட் கட்ட முடிவு பண்ணியிருக்காங்க. ஆளும் கட்சி சப்போர்ட் இருந்தா நல்லாயிருக்குமேன்னு, மரியாதை நிமித்தமா முக்கிய புள்ளியை போய் பாத்துருக்காங்க.
சால்வை போட்டு, ஒரு கிப்ட் பாக்சையும் கொடுத்து, அவங்களோட புராஜெக்ட் பத்தி சொல்லியிருக்காங்க. எல்லாத்தயும் கேட்டுகிட்ட அந்த புள்ளி, 'என்ன சப்போர்ட் வேணும்னாலும் பண்றேன்'னு உத்தரவாதம் கொடுத்துட்டாரு.
இவங்களும் காபி சாப்பிட்டுட்டு மகிழ்ச்சியா கிளம்புனாங்க. கடைசியாதான் மேட்டருக்கு வந்தாரு, அந்த புள்ளி. 'நான் ஒருத்தரோட பேரு, அட்ரஸ் தர்றேன், அந்த பேருல ஒரு பி.எம்.டபுள்யூ கார், புக் பண்ணி கொடுத்திருங்க'ன்னு சொல்லிட்டாரு.
இதை கேட்டவுடன் கட்டுமான நிறுவனத்துக்காரங்க 'ஷாக்' ஆயிட்டாங்களாம். ஒரு நிமிஷம் எதுவும் பேச முடியாம திகைச்சு போன அவங்க... 'சரி பார்க்கிறோம்'னு சொல்லிட்டு, கெளம்பிட்டாங்களாம் என்று முடித்தாள் மித்ரா.
''கட்டுமான கம்பெனி வச்சுருக்காங்க, மார்க்கெட் நிலவரம் என்னான்னு கூட தெரியாம ஏன் ஆளும் கட்சி புள்ளியப் போய் பாத்தாங்களாம். இப்படி தேடிப்போய் ஆப்புல உட்காந்துட்டு, அப்புறம் அவங்க கேட்டாங்க இவுங்க கேட்டாங்கன்னு சொல்லலாமா, அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்னு சொல்லிட்டு போக வேண்டியதுதான்,'' என்றாள் சித்ரா.
''சரி விடு, அது அவங்க பாடு, நம்ம கார்ப்பரேஷன் எல்லாம் எப்டி இருக்கு,'' என்று அடுத்த சப்ஜெக்ட்டுக்கு மாறினாள் மித்ரா.
''அங்க எப்பவும் போல தான் இருக்கு. ஜே.என்.என்.யு.ஆர்.எம்., பிரிவு கலைக்கப்பட்ட நிலைமைல, அதில் வேலைபார்த்த சத்தியமான பெண் அலுவலர் ஒருத்தரை, மாநகராட்சி பிரதான அலுவலகத்துக்கு மாத்திட்டாங்க. ஆனா அவரோ, தனக்கு வேற இடத்துக்கு டிரான்ஸ்பர் வேணும்னு ஏதேதோ காரணத்த சொல்லி, கணவர் மூலமா குறைதீர் கூட்டத்துல மனு கொடுத்திருக்காரு. மனுவை வாங்கிப்படிச்ச கமிஷனர், 'ஏன் அந்தம்மா வர மாட்டாங்களா'ன்னு கேட்டு, லெப்ட் அண்டு ரைட் வாங்கிட்டாராம்,'' என்றாள் சித்ரா.
''அதானே, கரெக்டா தான் பண்ணிருக்காரு,'' என்ற மித்ரா, ''மார்க்சிஸ்ட் - தி.மு.க., முட்டல் மோதல் எல்லாம் எப்படி இருக்கு,'' என்று நமட்டுச்சிரிப்பு சிரித்தாள்.
அதற்கு சித்ரா, ''உனக்கு சிரிப்பா இருக்குதா, மாநகராட்சி கூட்டத்துல, மார்க்சிஸ்ட் கட்சியோட கவுன்சிலர்களுக்கும், தி.மு.க., மண்டல தலைவர்களுக்கும் உரசல் வந்துட்டே இருக்குது. ஒவ்வொரு கூட்டத்துலயும் சில தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறதை, மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் வழக்கமா வெச்சுருக்காங்க.
''எப்போ வேணும்னாலும் ரெண்டு தரப்புக்கும், மோதல் வெடிக்கும்னு எல்லாரும் காத்துட்டு இருக்காங்க. இப்படி உரசிகிட்டே இருந்தா அடுத்த வருஷம் எம்.பி., தேர்தலை ஒத்துமையா சந்திச்ச மாதிரிதான்னு, கட்சிக்காரங்க மண்டபத்துல பேசிக்கிறாங்க,'' என்று முடித்தாள்.
''சரி விடுப்பா, போர் அடிக்குது ஏதாச்சும் பாலிடிக்ஸ் விவகாரம் இருந்தா சொல்லு,''
மித்ரா கேட்டதும், ''மித்து, இப்பல்லாம், ஜல்லிக்கட்டு காளை வளர்க்குறது தான் அரசியல்வாதிங்களுக்கு பேஷன். லேட்டஸ்ட்டா மீனா ஜெயக்குமாரும் வளர்க்குறாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''யாரு, மாஜி எம்.எல்.ஏ.,வுக்கு எதிரா போர்க்கொடி துாக்கினாங்களே அந்த அம்மாவா,'' என்ற மித்ராவுக்கு, ''ஆமாமா, அதே அம்மா தான். இப்போ அவங்க வளர்க்குற காளை போட்டியில எல்லாம் போயி ஜெயிச்சுக்கிட்டு வருதாம். அம்மாவுக்கு பெருமை தாங்க முடியலை. டுவிட்டர்ல போட்டு சந்தோஷப்படுறாங்க,'' என்றாள் சித்ரா.
அதைக்கேட்ட மித்ரா, ''பாரப்பா, ஏற்கனவே காளை வளர்த்து, ஜல்லிக்கட்டு போட்டியெல்லாம் செலவு பண்ணி பிரமாதமா நடத்தி, அள்ளி அள்ளி பரிசெல்லாம் கொடுத்த ஒரு அம்மணி, கடைசில கவுன்சிலர் ஆனது தான் மிச்சம். இந்த அம்மணிக்கு கவுன்சிலர் சீட்டும் கூட கிடைக்கலை. சரி, என்னமோ காளை தானே தாராளமா வளர்க்கட்டும்,'' என்றாள்.
''சரி போகட்டும், நானும் ஒரு ஆளும் கட்சி விஷயம் வெச்சுருக்கேன்,'' என்ற மித்ரா, ''அன்னூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக கூறியதை தொடர்ந்து, நெறயப்பேரு அந்த போஸ்டிங்கை பிடிக்கிறதுக்கு முயற்சி பண்றாங்க.
ஆளும் கட்சி பதவியில்லையா, அதனால போட்டி கடுமையா இருக்குது. ஆனா கட்சித்தலைமை எந்த முடிவும் அறிவிக்காம இருக்குது. அதுல சில பேரு, பொறுப்பு அமைச்சர் கிட்ட ஆசி வாங்குறதுக்கு முயற்சி பண்றாங்களாம். பாப்போம், யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுதுன்னு,'' என்று முடித்தாள்.
''சரி, அரசு பொருட்காட்சி தொடங்கிருக்காங்களாமே, அதுல ஏகப்பட்ட விதிமீறல் நடந்திருக்காமே,'' என்று சித்ரா தொடங்க மித்ரா, ''ஓ, அந்த விவகாரம் தான் பத்திக்கிட்டு எரியுதே இப்போ,'' என்று நிறுத்தி விட்டு தொடர்ந்தாள்.
''நானும் பொருட்காட்சிக்கு போயிருந்தேன். அரசு துறை அரங்குகள் சைஸ் ரொம்ப சின்னதா இருந்துச்சு.
அரசு துறை அரங்கிற்கு ஒதுக்கிய இடத்துல, தலா, 200 சதுரடி குறைச்சிட்டு, பிரைவேட் கடைக்காரங்களுக்கு ஒதுக்கிக் கொடுத்திருக்காங்க. ராட்டினங்கள்ல விளையாடுறதுக்கும், ஸ்நாக்ஸ் கட்டணமும் ரொம்பமும் ஜாஸ்தியா இருந்துச்சு.
கலெக்டர் விசாரணை நடத்தியும் கூட, கட்டணத்தை குறைக்க முன்வரலை. செய்தி துறையினரும் நடவடிக்கை எடுக்காம, டெண்டர் எடுத்தவங்களுக்கு சாதகமா நடந்துக்கிறாங்க அப்படினு புகார் இருக்குது. கடைசியா, ரேட் அதிகமா இருக்கறதுனால, பொதுமக்களே ராட்டினத்துல ஏறுறதுக்கு தயக்கம் காட்டுறாங்க. கூட்டமும் குறைவா தான் இருக்குதாம். ''விவகாரம் கலெக்டர் கிட்ட போயிருக்குது. அவர் யாருடைய உருட்டல் மிரட்டலுக்கும் பயப்பட மாட்டாரு. பொருட்காட்சியை அவ்வப்போது ஆர்.டி.ஓ., - தாசில்தாரை ஆய்வு செய்யச் சொல்லி இருக்காரு. கிராம உதவியாளர்களுக்கும் டியூட்டி போட்டிருக்காங்களாம்,'' என்று ஒரே மூச்சாக சொல்லி முடித்தாள்.
''நானும் ஒரு கலெக்டர் ஆபீஸ் பிரச்னையை சொல்றேன் கேளு,'' என்ற சித்ரா, ''கால் ஒடைஞ்சு மருத்துவமனையில் இருக்கும் தாசில்தார் ஒருத்தருக்கு ரிஷப்சன் தாசில்தார் வேலை கொடுத்திருங்காங்க. அவரோ, எனக்கு அந்த வேலை எனக்கு வேண்டாம். பழையபடி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு பறக்கும் படை வேலை தான் வேணும்னு அடம் பிடிக்கிறாராம்.
'நான் ஏற்கனவே பறக்கும் படைல இருந்தப்போ, அரிசி கடத்துறவங்கள துரத்திப் பிடிச்சேன். அவங்க என் கால் மேல, ஜீப்பை ஏத்தினதுல தான் கால் உடைஞ்சுது. அதுனால எனக்கு மறுபடியும் அதே பொறுப்பு தான் தரணும்' அப்படின்னு கேட்டிருக்காரு.
ஆனா அதிகாரிங்க, அதை கண்டுக்கலை. 'உங்களை யார் போலீஸ் பாதுகாப்பு இல்லாம கடத்தல்காரங்களை துரத்திட்டு போகச் சொன்னது'ன்னு கேட்டு திருப்பி அனுப்பிட்டாங்களாம். இப்போ அந்த அதிகாரி என்ன செய்யறதுன்னு தெரியாம, கையை பிசஞ்சுகிட்டு இருக்காராம்,'' என்று முடித்தாள்.