உடுமலை:எண்பது சதவீதத்துக்கும் குறைந்த தேர்ச்சி சதவீதம் பெற்ற அரசுப்பள்ளிகளில், முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையிலான குழு ஆய்வு நடத்தி, காரணங்களைக் கண்டறிந்து களைய வேண்டும்; புதிய கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதம் உயர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில், அரசு பள்ளிகளைப்பொறுத்தமட்டில், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், உடுமலை ராஜேந்திரா ரோடு, மிக குறைந்த தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளது.
இப்பள்ளியில், 20 மாணவர், 11 மாணவியர் என, 31 பேர் தேர்வெழுதினர். பத்து மாணவர், ஏழு மாணவியர் என, 17 பேர் தேர்ச்சி பெற்றனர்; 14 பேர் தேர்ச்சியடையவில்லை. தேர்ச்சி சதவீதம், 54.84.
இதேபோல, அனுப்பர்பாளையம் அரசுப்பள்ளியில், 192 மாணவர். 127 மாணவியர் என, 319 பேர் தேர்வெழுதினர்; 148 மாணவர், 105 மாணவியர் தேர்ச்சி பெற்றனர். 44 மாணவர். 22 மாணவியர் என. 66 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம், 79.31,
இடுவாய் அரசு பள்ளியில், 37 மாணவர். 38 மாணவியர் என, 75 பேர் தேர்வெழுதினர். 24 மாணவர், 35 மாணவியர் தேர்ச்சி பெற்றனர்; 13 மாணவர் மூன்று மாணவியர் என, 15 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம், 78.67.
உடுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில், 133 மாணவர் தேர்வெழுதி, 104 தேர்ச்சி பெற்றனர்: 20 பேர் பேர் தேர்ச்சியடையவில்லை. தேர்ச்சி சதவீதம், 78.20.
பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 96 பேர் தேர்வெழுதி, 75பேர் தேர்ச்சி. 21 பேர் தேர்ச்சி இல்லை. தேர்ச்சி சதவீதம், 78.12.
ஏன், தேர்ச்சி சதவீதம், 80 க்கும் கீழ் சரிந்தது என்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு நடத்த வேண்டும்.
வரும் கல்வியாண்டு துவங்கும் முன், இப்பள்ளிகளுக்கான திட்டமிடல்களை வகுப்பது சாலச்சிறந்தது.