பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, குடிநீர் முறையாக வினியோகிக்க வேண்டும், என, டி.கோட்டாம்பட்டி பகுதி மக்கள் மறியலில் ஈடுபட முயற்சித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி நகராட்சிக்கு ஏழாவது வார்டுக்கு உட்பட்ட, டி.கோட்டாம்பட்டி தண்டுமாரியம்மன் கோவில் வீதி மக்கள், காலிக்குடங்களுடன் பல்லடம் ரோட்டில் மறியல் செய்ய வந்தனர். இதையடுத்து, அங்கு வந்த மகாலிங்கபுரம் போலீசார், நகராட்சி அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.
பொதுமக்கள் கூறுகையில், 'குடிநீர் குழாயில் பாதாள சாக்கடை நீர் கலந்ததால், குடிநீர் கலங்கலாக வந்தது. குடிநீரில் துர்நாற்றம் வீசியதால், குடிக்க பயன்படுத்த முடியவில்லை.
இதை சரி செய்ய அதிகாரிகளிடம் முறையிட்டதும், உடைப்பு ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்து அதை சரி செய்தனர். ஆனால், அதன்பின், 20 நாட்களாக குடிநீர் முறையாக வினியோகம் செய்யவில்லை. இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'குடிநீரில் கழிவுநீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது குடிநீர் முறையாக வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.