தஞ்சாவூர்,-தஞ்சாவூரில், 'டாஸ்மாக் பாரில்' விஷம் கலந்த மதுவை குடித்து, இருவர் பலியானது தொடர்பாக, ஐந்து டி.எஸ்.பி.,க்கள் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.
தஞ்சாவூர், கீழ அலங்கம், அரசு டாஸ்மாக் மதுபான கடையின் அருகே உள்ள, 'பாரில்' நேற்று முன்தினம், காலை, 11:00 மணிக்கு மது வாங்கி குடித்த, மீன் வியாபாரி குப்புசாமி, 68; கார் ஓட்டுனர் விவேக், 36, பலியாகினர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், 'சயனைடு' கலந்த மதுவை குடித்ததால், இருவரும் உயிரிழந்தது தெரிந்தது.
இதை கலெக்டர் பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உறுதி செய்தனர்.
இறந்தவர்களின் உடலில் இருந்து வயிற்றுப்பகுதி, சிறுநீரகத்தில் இருந்து மாதிரிகள் எடுத்து, தஞ்சாவூர் மண்டல தடய அறிவியல் ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டது.
அப்போது, இருவர் உடலில் சயனைடு கலந்து இருப்பது தெரிந்தது. இருவரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
உயிரிழந்த நபர்களுக்கு, சயனைடு விஷம் எப்படி கிடைத்தது என்பது குறித்து, துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.
இதனால், கூடுதல், டி.எஸ்.பி.,க்கள் ஜெயசந்திரன், முத்தமிழ் செல்வன் உட்பட, ஐந்து டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரிக்கின்றனர்.
'கட்டிங்' காரணமா?
விவேக், குடும்ப பிரச்னை காரணமாக, மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
இதனால், மதுபோதைக்கு அடிமையானவர். மதுவில் சயனைடு கலந்து குடித்து, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
அவர் குப்புசாமிக்கும், 'கட்டிங்' எனும் பெயரில், கொஞ்ச மது கொடுத்து இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். இருவரும் உறவினர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
பாருக்கு சீல்
திருட்டுத்தனமாக மது விற்ற பாரை, தஞ்சாவூர் மாவட்ட, காங்., துணை தலைவர் பழனிவேல் நடத்தி வந்தார். இந்த பாருக்கு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.
பழனிவேல், பார் ஊழியர் காமராஜ் ஆகியோரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.