ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணவும், கல்வியை மேம்படுத்தி, அரசின் திட்டங்களை மக்களிடம் முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும், என புதிய கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நாகைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில் நேற்று விஷ்ணு சந்திரன் புதிய கலெக்டராக பொறுப்பேற்றார்.நேற்று இருவரும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். அதன் பின் மதியம் 3:00 மணிக்கு விஷ்ணு சந்திரன் பொறுப்பேற்றார்.
அப்போது அவர் கூறியதாவது:
பரமக்குடியில் 2017 ல் சப்-கலெக்டராக ஒன்றரை ஆண்டுகள் பணிபுரிந்துள்ளேன். மக்கள் பிரச்னை, கலாசாரம் நன்றாக தெரியும். நாகர்கோவில், துாத்துக்குடி, சென்னையில் பணிபுரிந்து கலெக்டராக ராமநாதபுரம் வந்துள்ளேன். ஒவ்வொரு ஊருக்கும் அரசின் திட்டங்கள் கொண்டு செல்வேன்.
குடிநீர் பிரச்னைக்கு அதிகாரிகளுடன் பேசி தீர்வு காணப்படும். கல்வித் துறையில் மாநில அளவில் சாதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல எல்லா துறைகளிலும் கவனம் செலுத்தப்படும். 24 மணி நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம்.
சிங்கப்பூர் போல மாற்றுவேன், என கூறவில்லை. என்னால் முடியும் என்றால் நிச்சயம் செய்து தருவேன், என்றார்.