சிங்கம்புணரி, ; சிங்கம்புணரி அருகே 22 நாட்களாக மின்சாரமும் 8 நாட்களாக குடிநீரும் இல்லாமல் தவித்த கிராம மக்கள் பொறுமை இழந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இவ்வொன்றியத்தில் வடவன்பட்டி ஊராட்சி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு கடந்த 22 நாட்களாக போதிய மின்சாரம் கிடைக்காமல் குறைந்தழுத்த மின்சாரமே வந்துள்ளது. இதனால் பம்புசெட் உள்ளிட்ட மின் உபகரணங்கள் சரிவர இயங்கவில்லை. இதன் காரணமாக கடந்த 8 நாட்களாக இப்பகுதிக்கு மட்டும் ஊராட்சி நிர்வாகத்தால் குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. அருகேயுள்ள கண்மாயில் தண்ணீர் எடுத்து வந்தனர். நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில் பொறுமை இழந்த கிராம மக்கள் நேற்று காலை அரளிக்கோட்டை - மேலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தாசில்தார் சாந்தி, போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். ஒரே நாளில் மின்சார குடிநீர் பிரச்னையை சரி செய்வதாக உறுதியளித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது.