விழுப்புரம் : மரக்காணம் கள்ளச்சாராய வழக்கின் விசாரணை, சி.பி.சி.ஐ.டி., யிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த எக்கியர்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் இறந்தனர். 40க்கும் மேற்பட்டோர் உடல் நிலை பாதிக்கப்பட்டனர்.
மரக்காணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கள்ளச்சாராயம் விற்பனை செய்த அமரன் உட்பட 6 பேரை கைது செய்தனர். தனிப்படை போலீசார், மெத்தனால் விற்பனை செய்த இளையநம்பி, ஏழுமலை உட்பட 6 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், முதல்வர் உத்தரவின்படி, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம் செய்ய டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி., உத்தரவின் பேரில், ஏ.டி.எஸ்.பி., கோமதி உள்ளிட்ட அதிகாரிகள் 2 தினங்களுக்கு முன் விழுப்புரம் வந்து, முதல் கட்ட ஆய்வை நடத்தினர். இதனையடுத்து, இந்த வழக்கு, நேற்று முறைப்படி சி.பி.சி.ஐ.டி., வசம் ஒப்படைக்கப்பட்டது.
கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., சுனில் தலைமையிலான போலீசார், மரக்காணம் கள்ளச்சாராய பலி சம்பவம் தொடர்பான வழக்கின் ஆவணங்களை, சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., கோமதியிடம் ஒப்படைத்தனர். சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.