விக்கிரவாண்டி : மரக்காணம் அருகே, கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில், மேலும் 10 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த எக்கியர்குப்பம் கிராமத்தில், கடந்த 13ம் தேதி கள்ளச்சாராயம் குடித்த 61 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அதில், ஒரு பெண் உட்பட 14 பேர் இறந்தனர். 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் 34 பேர் பொது வார்டுகளிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்களில் நேற்று முன்தினம் வரை, 31 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மரக்காணம் மற்றும் எக்கியர்குப்பத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், 73; ஜெயராமன், 60; மனோகரன், 55; ஊத்துக்காட்டான், 47; வீரானந்தம், 41; பொன்னப்பன், 42; சண்முகம், 77; கல்வி, 62; கீர்த்திவாசன், 56; நவநீதம், 42; ஆகிய 10 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தற்போது, தீவிர சிகிச்சை பிரிவில் 2 பேர், பொது வார்டில் 4 பேர் என மொத்தம் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.