திருவாலங்காடு: திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் ஊராட்சியில் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் மணிமேகலா, 45, இங்கு மே 1ல் நடந்த கிராம சபை கூட்டத்தில் கிராம இளைஞர்கள் மஹாத்மா காந்தி தேசிய ஊரக பணிகள் குறித்தும், இதுவரை செய்யப்பட்ட பணிகளின் விபரங்கள் மற்றும் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்தும் கேள்வி எழுப்பினர்.
அப்போது முன்னுக்குபின் முரணா க தகவல்கள் அளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து போதிய மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கிராம சபை கூட்டத்தை பி.டி.ஓ., பாலசுப்ரமணியம் ரத்து செய்தார்.
இந்நிலையில் கிராம சபை கூட்டத்தில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் ரூபேஷ் பெரியகளக்காட்டூர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்து கோப்புகளை ஆய்வு செய்து பஞ்சாயத்து தலைவர் மற்றும் செயலரிடம் விசாரித்தார்.
பின் நேற்று கிராம சபை கூட்டம் நடைப்பெறுவதாக அறிவித்திருந்த நிலையில் நேற்றும் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, 'கிராம மக்களுக்கு கிராம சபை கூட்டம் நேற்று நடப்பது குறித்து உரிய முறையில் தெரிவிக்கவில்லை. ஜூன் 2ல் கிராம சபை கூட்டம் நடத்தப்படும். உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்படும்' என்றனர்.