மரக்காணம் : மரக்காணம் அடுத்த பிரம்மதேசம் போலீஸ் ஸ்டேஷன் சார்பில் சாராய ஒழிப்பு குறித்து மக்கள் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
பிரம்மதேசம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களில் சாராய விற்பனையைத் தடுக்கும் பொருட்டு ஊராட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமை தாங்கி பேசுகையில், 'பிரம்மதேசம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாராயம் முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும்.
சாராயம் விற்பனை குறித்து ஊராட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் அனைவரும் போலீஸ் மூலம் உருவாக்கப்பட்டுள்ள 'வாட்ஸ் ஆப்' குழு மூலம் தகவல்களை அளிக்கலாம். தகவல் ரகசியம் காக்கப்படும். முற்றிலுமாக சாராய விற்பனை குறைக்கப்படும் பட்சத்தில் சாராயம் அற்ற கிராமமாக அறிவிக்கப்படும்' என்றார்.
போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.