விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் பஸ், லாரி, வேன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இந்த சாலை சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தில், ரூ.136 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது.
80 சதவீத பணிகள் முடிந்த நிலையில், விருத்தாசலம் பஸ்நிலையம் - பாலக்கரை வரை கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி மந்தமாக நடக்கிறது.
இதன் காரணமாக இந்த பகுதியில் அடிக்கடி வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில், மேலும், விரிவாக்க பணிக்காக கடந்த வாரம் சாலையோரம் உள்ள மின் கம்பங்கள் அகற்றும் பணி நடந்தது. அப்போதும் வாகன ஓட்டிள் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர்.
இந்நிலையில், நேற்று மாலை 3:00 மணியளவில், எவ்வித முன் அறிவிப்புமின்றி விருத்தாசலம் பஸ் நிலையத்தில் வெளிப்புறம் இருந்த மின்கம்பத்தை ஜே.சி.பி., கிரேன் உதவியுடன் அதிகாரிகள் அகற்றினர். பரபரப்பான ஜங்ஷன் சாலையில் குறுக்கே கிரேன், ஜே.சி.பி., இயந்திரங்கள் நின்றதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், ஒருகிலோமீட்டர் துாரம் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இச்சம்பவத்தால், ஒன்னரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
சாலை பணி முடியும் வரை ஜங்ஷன் சாலையை ஒருவழிப்பாதையாக மாற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.