மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கருங்குழி பகுதியில், கல்குவாரியில் இருந்து கருங்கல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி கவிழ்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திரிசூலம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 32; டிப்பர் லாரி ஓட்டுனர். இவர், நேற்று மேல்மருவத்துாரில் இருந்து திரிசூலத்திற்கு டிப்பர் லாரியில் கருங்கல் ஏற்றிக் கொண்டு, கருங்குழி அருகே சென்ற போது, தனியார் சொகுசு பேருந்து முந்த முயன்றது.
அப்போது, டிப்பர் லாரி ஓட்டுனர் 'பிரேக்' பிடித்ததில், நிலை தடுமாறி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது.
லாரியில் இருந்த கருங்கல் சாலையில் சிதறின.
இதனால், சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இரு மார்க்கத்திலும், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த மதுராந்தகம் போலீசார், ஜே.சி.பி., இயந்திரத்தின் உதவியுடன் கருங்கல் சக்கைகளை அப்புறப்படுத்தி, டிப்பர் லாரியை மீட்டு, போக்குவரத்தை சரிசெய்தனர்.