நெல்லிக்குப்பம் : தினமலர் செய்தி எதிரொலி காரணமாக நெல்லிக்குப்பத்தில் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
நெல்லிக்குப்பம் நகராட்சி மூலம் தினமும் காலை மாலை இரு வேளைகள் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ராமு தெரு, கைலாசநாதர் கோவில் உட்பட பல பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் மக்களுக்கு நோய் பரவியது. இதனை சுட்டிக்காட்டி தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளம் தோண்டி குடிநீர் குழாய்களை சோதனை செய்தனர். ஆனால் எங்கு கழிவுநீர் கலக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் ஊழியர்கள் திணறினர். இதையடுத்து, குடிநீர் கிடைக்காமல் இப்பகுதி மக்கள் சிரமப்பட்டனர்.
இது குறித்தும் தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதன் காரணமாக கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின்பேரில், 9வது வார்டு மக்களுக்கு லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. குடிநீர் பிரச்னை தீரும் வரை லாரி மூலம் குடிநீர் வழங்கப்படும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.