தேனி : தேனியில் யாசகம் கேட்ட சிறுவர்களுக்கு உணவு வாங்கித்தந்த நபரை தாக்கிய ஓட்டல் ஊழியர் தேனியை சேர்ந்த கோவிந்தராஜ் 53, மீது தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
கேரளா, கொல்லம் மாவட்டம், கருநாகப்பள்ளியை சேர்ந்த லாட்ஜ் மேலாளர் சித்திக் 62. இவர் நேற்று முன்தினம் இரவு தேனி வந்தார். தேனி புது பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள ஓட்டலில் உணவருந்திய சித்திக், வெளியே வந்த போது அங்கிருந்த சிறுவர்கள் (உடலில் சாட்டையடித்துக் கொண்டு யாசகம் கேட்கும் சிறுவர்கள்) யாசகம் கேட்டனர்.
அதற்கு சித்திக், காசு தர இயலாது. சாப்பாடு வாங்கித் தருகிறேன்' என்றார். இதனால் இவர் சாப்பிட்ட ஓட்டலில் உணவு வாங்கித் தந்தார்.
அவர்களும் ஓட்டலில் அமர்ந்து சாப்பிட்டனர். அவர்கள் சாப்பிட்ட உணவுக்கு பணம் வழங்கிவிட்டு வெளியே வந்த சித்திக்கை மேலும் பல சிறுவர்கள் சூழ்ந்து யாசகம் கேட்க, அவர்களுக்கும் உணவு வாங்கி தந்து வெளியே வந்த சித்திக்கிடம் சில பெண்கள், சிறுவர்கள் யாசகம் கேட்டனர். தன்னிடம் பணம் குறைவாக உள்ளது என்று ரூ. 100 கொடுத்து உணவருந்திக் கொள்ள கூறியுள்ளார்.
அப்போது சிறுவர்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் சிலர் கூடினர். இதுபோன்றவர்களை இங்கு கூட்டி வந்து உணவருந்தினால் வாடிக்கையாளர்கள் வருகை குறையும் என, ஓட்டல் ஊழியர்கள் சித்திக்கிடம் கூறினர். இதனால் சித்திக்கிற்கும் ஓட்டல் ஊழியர்களுக்கு இடையே நடந்த தகராறில் ஓட்டல் ஊழியர் கோவிந்தராஜ்,சித்திக்கை தாக்கினார்.
இதில் சித்திக் காயம் ஏற்பட்டது. தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது புகாரில் ஓட்டல் ஊழியரான கோவிந்தராஜ் மீது தேனி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.