காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில், குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.
இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த 148 பேர் மனு அளித்தனர்.
மனுக்களை பெற்ற அமைச்சர் அன்பரசன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, 'மனு மீது விசாரித்து, நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அறிவுறுத்தினார்.
வீட்டு மனை பட்டா கேட்டும், குடிநீர் வசதிகள், சாலை சீரமைப்பு, வடிகால்வாய் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன.
இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், 40 நிருபர்களுக்கு, பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர் அட்டையை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.
மேலும், ஊரக வளர்ச்சித் துறை சார்பில், உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட 10 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஒதுக்கீடு ஆணைகளும், இரு பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளும், புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பணி ஆணைகளையும் அவர் வழங்கினார்.
அதேபோல, சிறுபாலம் கட்டவும், பள்ளிகளுக்கு சமையலறை கட்டடம் கட்டவும் பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
இறுதியாக, மாவட்ட தொழில் மையம் சார்பில், தொழில் துவங்க ஆறு பயனாளிகளுக்கு, 28.9 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன.
பென்னலுார் கிராமத்தைச் சேர்ந்த 15 பயனாளிகளுக்கும், சீயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இருவர் என, 17 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட பொறுப்பு கலெக்டர் சிவருத்ரய்யா, காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., எழிலரசன், ஸ்ரீபெரும்புதுார் காங்., - எம்.எல்.ஏ., செல்வபெருந்தகை, மாவட்ட ஊராட்சி தலைவர் மனோகரன், திட்ட இயக்குனர் செல்வகுமார், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.