வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்படும் பேருந்து நிலையத்தில், ரயில் நிலையங்களில் உள்ளது போல, நடைமேடை கட்டணம் வசூலிக்க, நிதித்துறை பரிந்துரைத்துள்ளது.
சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, வண்டலுார், கிளாம்பாக்கத்தில் 400 கோடி ரூபாயில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. பேருந்துகள் வந்து செல்வதற்கான பாதை வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
திறப்புக்கு பின் இதன் பராமரிப்பு, வருவாய் ஈட்டும் நடவடிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்காக சி.எம்.டி.ஏ., நியமித்த தனியார் கலந்தாலோசகர் பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளார்.
அதில், பேருந்து நிலைய வளாகத்தில் காலியாக உள்ள, 6.5 ஏக்கர் நிலத்தில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக பேருந்து நிலைய செலவுகளை ஈடு செய்யும் அளவுக்கு வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த பரிந்துரைகள் அடிப்படையில் நிதித்துறை உயரதிகாரி தலைமையிலான ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது.
இதுகுறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வருவாய் ஈட்டும் நோக்கில், வணிக வளாகம் கட்டும் திட்டம் உள்ளது. பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பின், சில ஆண்டுகள் கழித்து இது குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் உள்ளது போல, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணியர் அல்லாத பார்வையாளர்களுக்கு, 'பிளாட்பார்ம் டிக்கெட்' எனப்படும், நடைமேடை கட்டணம் விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பயணியர் அல்லாத பார்வையாளர்களுக்கு கட்டணம் விதிப்பது குறித்து சி.எம்.டி.ஏ., கொள்கை முடிவு எடுக்க வேண்டும் இதற்கான, கட்டணம் மற்றும் வசூல் வழிமுறைகளை கலந்தாலோசகர் வாயிலாக இறுதி செய்யலாம்.
இதேபோல, அருகில் உள்ள காலி இடத்தில் தொல்லியல் மற்றும் அறிவுசார் பூங்காவிலும், கட்டணம் விதிப்பதற்கான வழிமுறைகளை யோசிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -
இவ்வாறு அவர் கூறினார்.