- நமது நிருபர் -
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்ப பெரும் அறிவிப்பு வெளியானதிலிருந்து, பெட்ரோல் பங்க்குகள், ஷாப்பிங் மால்கள், மருந்துக்கடைகளில் இந்நோட்டுக்களை பெற்றுக்கொள்ளாமல், திருப்பி அனுப்புவது தொடர்கிறது.
செப்.,30 வரை செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதால், இந்நோட்டுக்களை மக்கள் அதுவரை பயன்படுத்தலாம்.
ஆனால் அதற்கு முன்னதாகவே, இந்நோட்டுகளை பெற்றுக்கொள்ளாமல் வர்த்தகர்களும், வியாபாரிகளும் மறுத்து வருகின்றனர். இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கோவை மாவட்டத்திலுள்ள பெட்ரோல் பங்க்குகளில் 2,000 ரூபாயை பெற்றுக்கொள்வதில்லை. 500 ரூபாய் நோட்டுக்களை மட்டும் பெற்றுக்கொள்கின்றனர்.
அதே போல், சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங்மால்கள், மொத்த மளிகை வியாபாரிகள், மருந்துக்கடைகள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் பெற்றுக்கொள்வதில்லை. இதனால், இருக்கும் பணத்தை தேவைக்கு கூட செலவிட முடியாமல், மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
இது குறித்து, கோவை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜ்குமார் கூறியதாவது:
2,000 ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொள்ள முடியாது என்று, வாடிக்கையாளர்களை திரும்ப அனுப்பக்கூடாது. வர்த்தக ரீதியான 'கரென்ட் அக்கவுன்ட்' வைத்திருப்பவர்கள், எளிதாக 2,000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் செலுத்தலாம். எந்த விளக்கமும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.
ஆனாலும் பலர், இந்த விழிப்புணர்வு இல்லாமல், 2,000 ரூபாய் நோட்டை பெற்றுக்கொள்ள மறுப்பது தவறு. வியாபாரிகள், வர்த்தகர்கள் மக்களிடமிருந்து, 2,000 ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொண்டு, வர்த்தகத்தை மேற்கொள்ளலாம். அப்பணத்தை வங்கியிலும் செலுத்தலாம். எந்த பாதிப்புகளும் ஏற்படாது. இவ்வாறு, அவர் கூறினார்.