புழல் புழல் மத்திய சிறை வளாகத்தில் உள்ள பெண்கள் சிறையில், 152 பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று பெண் கைதிகளை சந்திக்க வந்த அவர்களது உறவினர்கள், பழம், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப்பொருட்களை வழங்கினர். அவற்றை, அயரின் ஜெனட் என்ற பெண் காவலர், வரிசைப்படி கைதிகளுக்கு, வழங்கி கொண்டிருந்தார்.
அப்போது, திருப்பூர் மாநகர போலீசாரால், கடந்த மாதம் மோசடி வழக்கில் கைதான, ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள உகாண்டா நாட்டு பெண் கைதி நசாமா சரோம், 35, 'தனக்காக அளிக்கப்பட்ட பழம், ரொட்டி, பிஸ்கட்களை உடனே கொடுங்கள்' என, அயரின் ஜெனட்டிடம் கேட்டார்.
அப்போது, உங்களுக்கு வழங்கப்பட்ட 'டோக்கன்' எண் வரிசைப்படி நின்று, மற்ற கைதிகளை போல் பெற்றுக்கொள்ளுங்கள் என்றார். அதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அந்த பெண் கைதி, சிறை காவலரை தாக்கினார்.
அதைக்கண்ட மற்ற காவலர்கள், அவரை தடுத்து அயரின் ஜெனட்டை மீட்டனர். இது குறித்து, உகாண்டா பெண் கைதி மீது, சிறை துணை அலுவலர் வசந்தி, புழல் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.