பெ.நா.பாளையம்:சின்னதடாகம் வட்டாரத்தில், 'சீல்' வைக்கப்பட்டிருக்கும் செங்கல் சூளைகளில் உள்ள இரும்பு பொருட்களை திருடி செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது.
சின்னதடாகம் வட்டாரத்துக்கு உட்பட்ட சோமையம்பாளையம், சின்னதடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட, 180க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, கோவை மாவட்ட நிர்வாகம், 180க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளை மூடி சீல் வைத்தது.
காட்டு யானைகளின் நடமாட்டத்தால் சின்னதடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், உள்ளிட்ட பகுதிகளில் தடாகம் போலீசாரின் இரவு நேர ரோந்து பணியில் தடை ஏற்பட்டுள்ளது. காட்டு யானைகளுக்கு பயந்து போலீசார் தோட்டப்பகுதிகள், செங்கல் சூளைகள் உள்ள பகுதிகளுக்கு ரோந்து செல்வதில்லை.
இதை பயன்படுத்தி திருடர்கள் செங்கல் சூளைகளில் உள்ள இரும்பு பொருட்களை திருடி செல்கின்றனர். தோட்ட பகுதிகளில் உள்ள மோட்டார், ஸ்விட்ச் போர்டுகள், ஒயர்கள் ஆகியவற்றையும் திருடி செல்கின்றனர்.
தடாகம் போலீசார் கூறுகையில், 'வீரபாண்டி பிரிவில் உள்ள செங்கல் சூளையில் பழைய இரும்பு பொருட்களை திருடிய வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ், 37, கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து, 60 கிலோ எடையுள்ள இரும்பு பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இரவு நேரத்தில் ரோந்து பணிகள் நடந்து வருகின்றன' என்றனர்.