பொள்ளாச்சி:பொள்ளாச்சி, சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் மனமுருகி வேண்டி, அடி அளந்தும், கம்பத்துக்கு புனித நீர் ஊற்றியும் வழிபாடு செய்கின்றனர்.
பொள்ளாச்சி அருகே, பிரசித்தி பெற்ற சூலக்கல் மாரியம்மன் கோவில், 18 கிராமங்களுக்கு பொதுவானது. நடப்பாண்டு திருவிழா கடந்த, 8ம் தேதி துவங்கியது. பாரம்பரிய முறைப்படி கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஈரத்துணியுடன் வேப்பிலை ஏந்தி, வீடுவீடாக சென்று, மடிப்பிச்சையாக அரிசி பெறுகின்றனர்.
சந்தன விநாயகர் கோவிலில் வழிபாடு செய்து, பிரார்த்தனையை துவங்கி, பக்தர்கள் அடி அளந்து கும்பிட்டு, கோவிலுக்குள் வலம் வருகின்றனர். அதன்பின், கம்பத்துக்கு முன் மடியேந்தி யாசகமாக பெற்ற அரிசியை கொட்டி அம்மனை வழிபாடு செய்கின்றனர். குறைகள் இன்றி, நோய் நொடிகள் இல்லாமல் நலமாக இருக்க அருள்புரிய வேண்டும் தாயே என மனமுருகி வேண்டுகின்றனர்.
மேலும், கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர். பூவோடு எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடனை செலுத்தி பக்தர்கள் வழிபடுகின்றனர். குழந்தைகள், கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டி, உருவாரங்களை வைத்து வழிபடுகின்றனர்.
குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டியும், திருமணம் நடைபெற வேண்டி மஞ்சள் கயிறு கட்டியும் அம்மனை வழிபட்டனர்.
நாளை தேரோட்டம்
சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழாவில் இன்று மாலை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மூன்று நாள் தேரோட்டம் நாளை (25ம் தேதி) துவங்குகிறது.
நாளை காலை, 5:00 மணிக்கு மாரியம்மன், விநாயகர் திருத்தேருக்கு புறப்படுதல், மாலை, 5:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
தேரோட்டத்தை முன்னிட்டு, 36 அடி உயரம் உள்ள அம்மன் தேர், 17 அடி உயரம் உள்ள, விநாயகர் தேர் தயார்படுத்தும் பணிகள் நடக்கின்றன. வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.