உடுமலை:உடுமலை நகரில், பல்வேறு முக்கிய பகுதிகளில் ரோட்டின் ஓரத்திலேயே டூ வீலர்கள், கார்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
உடுமலை நகரில், வங்கிகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பெரும்பாலும் போக்குவரத்து நிறைந்த மெயின் ரோட்டின் அருகில் தான் உள்ளன. நகரில் உள்பகுதியில் உள்ள அனைத்து ரோடுகளுமே மிகவும் குறுகலாக உள்ளன.
உடுமலையில், சில பெரிய நிறுவனங்கள், கடைகளைத் தவிர வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் ஏற்படுத்தி தரவில்லை. இதேபோல, ரோட்டின் அருகிலுள்ள பெரும்பாலான கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதனால், டூ விலரை முறையாக நிறுத்த வழியில்லை. பஸ் ஸ்டாண்டில் இருந்து, கொல்லம்பட்டறை வரையிலான பொள்ளாச்சி ரோட்டில், அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களால், கடந்து செல்கின்ற வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர்.
இந்த ரோடு ஒரு வழிச்சாலையாக உள்ள நிலையிலும், விதிமீறல் தொடர்வதால், விபத்து அபாயம் ஏற்படுகிறது.
இதுஒருபுறமிருக்க, ராஜேந்திரா ரோட்டில், சந்தைக்கு வரும் பலரும், தங்களது வாகனங்களை, ரோட்டின் இருபுறத்திலும் நிறுத்துகின்றனர். மற்ற வாகனங்கள் செல்ல தடை ஏற்படுகிறது.
தன்னார்வலர்கள் கூறியதாவது: ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது, போலீசார் அவ்வப்போது வழக்குப்பதிவு செய்தாலும், இந்நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குறுகிய வீதிகளில், ரோட்டை ஆக்கிரமிப்பு செய்யும் கடைக்காரர்களுக்கு, அபராதம் விதிக்க வேண்டும். போக்குவரத்தை முறைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.