காஞ்சிபுரம்,சின்ன காஞ்சிபுரம் பகுதியில் சி.எஸ்.ஐ., அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, பத்தாம் வகுப்பு முடித்த, 20 மாணவியர், பிளஸ் 1 வகுப்பில் சேர, அருகில் உள்ள பி.எம்.எஸ்., அரசு மேல்நிலைப் பள்ளியை அணுகியுள்ளனர்.
அப்பள்ளி தலைமையாசிரியை, சி.எஸ்.ஐ., பள்ளியைச் சேர்ந்த மாணவியரை சேர்க்க அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால், கலெக்டர் வளாக கூட்டரங்கில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் நேற்று, குறைதீர் கூட்டம் நடந்தது.
அங்கு, மாணவி ஒருவரின் தந்தை தனசேகரன் என்பவர், அரசு பள்ளியில் சேர்க்கை மறுத்ததாக புகார் மனுவை அமைச்சரிடம் வழங்கினார். அப்போது, தங்களை அரசு பள்ளியில் சேர்க்க மறுப்பதாக பள்ளி மாணவியர் சிலரும், அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வியிடம், மாணவியர் கூறும் புகார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க அமைச்சர் அன்பரசன், அறிவுறுத்தினார்.