தமிழ்நாட்டின் மாநில மரம் எது என்று கேட்டால் நம்மில் எத்தனை பேருக்கு
தெரியும் பனை மரம் தான் என்று. ஆம் மாநிலத்தின் அடையாளமாகவும், ஆதி தமிழர்
காலத்திலிருந்து கூடவே பயணிக்கும் இந்த பனைமரங்களின் எண்ணிக்கை நாளுக்கு
நாள் குறைந்து அழிவின் விளிம்பில் உள்ளது. பனைமரத்தை ஆதித் தமிழர்கள்
எவ்வாறு பாதுகாத்தனர் என்பது சில சான்றுகளை தெரிந்து கொள்வது அவசியமாகும்.
சோழ
மன்னர்கள் தங்களது பொற்காசுகளில் பனைமரத்தை அடையாளமாக பதித்தனர். ஊர்
எல்லையில் பனை மரத்தையும், தென்னை மரத்தையும் வளர்ப்பதற்கான உரிமையை சோழ
மன்னர்கள் வழங்கி பனையை பொருளாதார மையமாக்கினர். புதிய ஊர் உருவாகும் போது,
பனை தொழில் புரிவோரையும் அப்பகுதியில் குடியேற செய்தனர். வள்ளல் பாரி பனை
மரத்தை தனது சின்னமாக வைத்திருந்தார் என்றும், பல்வேறு வேலைகளுக்கு
பனைமரங்கள் பயன்படுத்தப்பட்ட என்றும் கல்வெட்டு ஆய்வுகள் கூறுகிறது.
இதுமட்டுமல்லாமல் பனையிலிருந்து மருத்துவப் பொருட்களும், உணவுப்
பொருட்களும் கிடைக்கிறது என்றால் வரப்பிரசாதம் என்று தானே சொல்ல வேண்டும்.
|
இப்படி போற்றி பாதுகாக்க வேண்டிய பனைமரத்தை, இடத்தை ஆக்கிரமிக்கிறது என்றும், செங்கல் சூளை அமைக்க வேண்டும் என்றும், சாலைகளை ஆக்கிரமிக்கிறது என்று ஆசிட் ஊற்றி அழிக்கிறது என செய்ய கூடாத பாவத்தைச் செய்தது போல், பனைமரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. பனைமரத்தை அழிக்க கூடாது என அரசு உத்தரவு போட்டாலும் அதை நாம் காதில் வாங்கி கொள்வதில்லை. பனை மரத்தை பாதுகாக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் சங்கங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், அதை எல்லாம் எங்களுக்கு தெரியாது, இடைஞ்சலாக இருந்தால் வெட்ட வேண்டியது தானே என்று தங்களது தேவைக்காக அழித்து வருகின்றனர்.
![]()
|
பனைமரங்கள் நிறைந்த பகுதிகளாகவும், பனைத் தொழிலை மூல ஆதாரமாகவும் கொண்டுள்ள ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கூட பனை அழித்து வருவது வேதனை அளிக்கக் கூடிய விஷயமாகும்.
![]()
|
இந்நிலையில் பனையின் முக்கியத்துவத்தை காவல் ஆய்வாளர் ஒருவர் எடுத்துக் கூறும் வீடியோவை பார்க்கும் போது, நம்மை ஒருநிமிடம் யோசிக்க வைக்கிறது. பனை வெல்லம், பதநீர், கற்கண்டு என பல்வேறு வகையில் தேவைகளை பூர்த்தி செய்யும் எதிர்கால சந்ததிக்கு பனைமரம் என்று ஒன்றே இருந்தது தெரியாமல் போய்விடுமோ என்ற அச்ச உணர்வை ஏற்படுகிறது.
அதில், 'ஒரு பனை மரம் காய்ந்தோ, வெட்டியோ தலை தொங்குகிறது என்றால், அந்த நாட்டில் 100 ஆண்டு காலம் பஞ்சம் தலைவிரித்தாடப் போகிறது என்று அர்த்தம். இந்த பனைமரத்தை நாம் காக்க தவறினால், மண் எல்லாம் மலடாகும், மரங்கள் மரணித்து போகும், ஈக்களும்,பூக்களும் மலடாகும். ஈக்களும், மலர்களும் மலடானால் மகரந்த சேர்க்கை நடைபெறாது. செடி, கொடி எல்லாம் வளராது. மாத்திரைகள் உணவாகும், சிறுநீர் குடிநீராகும், அதன்பிறகு திருந்தி விட்டேன் என்று புத்தனாக வாழ்ந்தாலும் புற்றுநோயுடன் வாழ்ந்தாக வேண்டும், இறந்தாக வேண்டும்' என அவர் பேசும் வீடியோ பசுமரத்தில் ஆணி அடித்தது போல் உள்ளது. ஆகையால் கோடையின் வரப்பிரசாதமான பனை மரத்தை பாதுகாத்து, நோயில்லா வாழ்வையும், நஞ்சில்லா உணவையும் எதிர்கால சந்ததிக்கு வழங்க நாம் முன் வர வேண்டும்.