பழுதடைந்த மின் விளக்குகள்
காஞ்சிபுரம், செங்கழுநீரோடை வீதியில், காமாட்சியம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் முதல், பூக்கடை சத்திரம் வரை, திருமண மண்டபம், பட்டு ஜவுளி, உணவகம், மளிகை கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த சாலையில் உள்ள பல தெரு மின் விளக்குகள் பழுதடைந்துள்ளதால், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இரவு பணி முடிந்து தனியாக வீடு திரும்பும் பெண்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே, செங்கழுநீரோடை வீதியில் பழுதடைந்த விளக்குகளை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.பன்னீர்செல்வம், காஞ்சிபுரம்.
பொது கழிப்பறை சீரமைக்கப்படுமா?
காஞ்சிபுரம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, பழைய ரயில் நிலையம் அருகில், 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பொது கழிப்பறை கட்டடம் உள்ளது.
இப்குதிவாசிகளும், ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணியரும் பயன்படுத்தி வந்தனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் கழிப்பறையின் தண்ணீர் தேவைக்காக அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை குழாயின் மின் மோட்டார் பழுதானது. மின் மோட்டாரை சீரமைக்காமல் கழிப்பறையை மூடி விட்டனர். எனவே, கழிப்பறையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- டி.மதனகோபால், காஞ்சிபுரம்.