பெண்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் வகையிலான, லுங்கியை தயாரித்து வரும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, 'வீராஸ் எக்ஸ்போர்ட்ஸ்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, முத்துக்குமரன்:
காஞ்சிபுரம் என்றாலே, பட்டுப்புடவை தான் நினைவுக்கு வரும். ஆனால், காஞ்சி புரம் சுற்று வட்டார பகுதிகளில், லுங்கி உற்பத்தி நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்தச் சூழலை பயன்படுத்தி, 1950களில் லுங்கி வியாபாரத்தை ஆரம்பித்தார், என் தாத்தா.
அவர் காலத்தில் கைத்தறிகள் வாயிலாகவே, லுங்கிகள் உற்பத்தி செய்யப்பட்டன. அதன்பின் எங்கப்பா, தொழிலுக்கு வந்த போது, விசைத்தறிகள் அறிமுகமாகின.
நான் கல்லுாரி படிப்பை முடித்ததும், குடும்ப தொழிலையே நிர்வகிக்க ஆரம்பித்தேன். 'நாயக்' என்ற பெயரில், உள்நாட்டில் அதிகமாக விற்பனையான, எங்கள் நிறுவனத்தின் லுங்கிகள், ஓமன் நாட்டுக்கு மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில், பல நாடுகளுக்கும் வர்த்தகம் செய்யத் துவங்கினேன்.
வருங்காலத் தேவை யை உணர்ந்து, ஆண்களுக்கான லுங்கிகள் மட்டுமன்றி, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான லுங்கிகள், சுருங்காத லுங்கிகள் போன்றவற்றையும் தயாரிக்க துவங்கினோம்.
நம்மூரில், கட்டம் போட்ட டிசைன் தான், அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த விஷயத்தை உணர்ந்து, நிறைய டிசைன்களில், நிறங்களில் லுங்கிகளை வடிவமைத்தோம்; விற்பனை மிகவும் அதிகரித்தது. வர்த்தக விஷயமாக, மலேஷியா, இலங்கை, மியான்மர் போன்ற நாடுகளுக்கு அடிக்கடி செல்வேன்.
அந்த நாடுகளில் நிறைய ஆண்கள், அலுவலகம் மற்றும் வெளிநிகழ்ச்சிகளுக்கு போகும் போது கூட லுங்கியை அணிந்து செல்வது, ஆச்சரியத்தைக் கொடுத்தது.
அதிலும், பெண்கள் பலர் லுங்கியை பயன்படுத்துவது தான், எனக்கு திகைப்பாக இருந்தது. அதன்பிறகே, பெண்களுக்கான லுங்கி களையும் தயாரிக்க துவங்கினோம்.
'லுங்கியை தண்ணியில் போட்டதும் சுருங்கி விடுகிறது' என்று, பலர் சொல்வதுண்டு. இதற்கு தீர்வாக, சுருங்காத லுங்கி களை அறிமுகப்படுத்தினோம்; அதற்கும் வரவேற்பு கூடியது.
ஆண்டிற்கு, 12 லட்சம் லுங்கிகளை உற்பத்தி செய்யும் அளவிற்கு, எங்களின் வர்த்தகம் அதிகரித்து உள்ளது.
இந்தத் தொழில் சரியாக வரும், சரியாக வராது என்று யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.
ஆனால், விற்பனைக்கான சந்தை நிலவரத்தையும், எதிர்கால வளர்ச்சி வாய்ப்பு களையும் கணித்து, எல்லா விதத்திலும், இந்தத் தொழில் நமக்கு சரிவரும் என்று பார்த்து ஆரம்பிக்கிற தொழில், எதுவானாலும் நிச்சயமாக வெற்றியை தரும்.