மறைமலை நகர்:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழகம் முழுதும், சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில், விளையாட்டு விடுதிகள் நடத்தி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்ட அளவிலான போட்டிகள், நேற்று காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டன.
இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 6 - 11ம் வகுப்பு படிக்கும் மாணவ -- மாணவியர் பங்கேற்றனர்.
ஓட்டப்பந்தயம், குத்துச்சண்டை, கால்பந்து உள்ளிட்ட 20 வகை விளையாட்டுகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், கபடி, ஓட்டப்பந்தயம், கால்பந்து, வில் வித்தை உள்ளிட்ட 8 விளையாட்டு போட்டிகளில், மொத்தம் 162 வீரர் -- வீராங்கனையர் பங்கேற்றனர்.
இதிலிருந்து, 70 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், ஜூன் மாத இறுதியில், சென்னையில் நடக்க உள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
மாநில அளவில் பங்கேற்று தேர்வாகும் வீரர் - வீராங்கனையருக்கு, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில், தங்குமிடம், போட்டிகளில் பங்கேற்க நிதியுதவி உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த போட்டிகள், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஜெயசித்ரா தலைமையில், செங்கல்பட்டு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திருவருள் செல்வன் முன்னிலையில் நடந்தன.