திருப்பூர் : காங்கயம் அருகே, விபத்தில் சிக்கியவர்களை சிகிச்சைக்கு அனுப்ப மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், உதவினார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த ஐந்து பேர், மாருதி ஈகோ காரில், கொடைக்கானல் சென்றுவிட்டு, அங்கிருந்து காங்கயம் வழியாக சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, காங்கயம் - தாராபுரம் சாலையில் வந்த போது, நேற்று மாலை, 4:30 மணிக்கு கார் விபத்துக்குள்ளாகியது; நிலைகுலைந்த கார், சாலையோரம் சாய்ந்தது.
காரில் இருந்த எடப்பாடி, சித்துாரை சேர்ந்த பிரகாஷ், 22 படுகாயமடைந்தார். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க உதவினர்.
அப்போது, நல்லதங்காள் ஓடை நீர்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சிக்கு, அவ்வழியாக சென்றுகொண்டிருந்த மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், காரில் இருந்து இறங்கி வந்து, விபத்தில் சிக்கியவர்களை, 108 ஆம்புலன்ஸ் மூலம், மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க உதவினார்.
அவ்வழியாக வந்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனும், தனது காரில் இருந்து இறங்கி வந்து விபத்து குறித்து கேட்டறிந்து, விபத்தில் சிக்கியவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குமாறு கூறினார்.