மும்பை, புதுடில்லி நிர்வாகம் தொடர்பான மத்திய அரசின் அவசர சட்ட விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முழு ஆதரவு அளிப்பதாக மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
புதுடில்லி நிர்வாகம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.
'சட்டம் - ஒழுங்கு, போலீஸ், நிலம் தவிர மற்ற அனைத்து நிர்வாகம் தொடர்பாக முடிவெடுக்க, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது' என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அரசு அதிகாரிகள் நியமனம் தொடர்பாக துணை நிலை கவர்னருக்கே அதிகாரம் அளிக்கும் வகையில், மத்திய அரசு அவசர சட்டத்தை அமல்படுத்தியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுடில்லி அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 'இந்த அவசர சட்டம் தொடர்பான மசோதா பார்லிமென்டில் வரும் போது, ராஜ்யசபாவில் நிறைவேற்ற விட மாட்டோம்' என, அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
இதற்காக, பல எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார். நேற்று முன்தினம் மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜியை சந்தித்தார்.
இந்நிலையில், மஹாராஷ்டிர முன்னாள் முதல்வரும், உத்தவ் பால் தாக்கரே சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேயை அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சந்தித்தார். இந்த விவகாரத்தில் முழு ஆதரவு அளிப்பதாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உத்தவ் தாக்கரே உறுதி அளித்தார்.