வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: அரசு பள்ளி மாணவர் சேர்க்கைக்கு, விதிகளை மீறி நன்கொடை வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம், காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்களில், சில அரசு மேல்நிலை பள்ளிகள் மற்றும் மாதிரி மேல்நிலை பள்ளிகளில், 6, 9, பிளஸ் 1ல் மாணவர்களை சேர்க்க, பெற்றோரிடம், 1000 ரூபாய் முதல், 5000 ரூபாய் வரை நன்கொடை வசூலிப்பதாக தெரிகிறது.
'நம்ம பள்ளி' திட்டம், வகுப்பறைகளுக்கு புதிய இருக்கைகள், மின் விசிறிகள் வாங்குவதற்கு என, காரணம் சொல்லப்படுகிறது.
சில பள்ளிகளில், பிளஸ் 1ல் மாணவர்கள் விரும்பும் பாடப் பிரிவுகளை ஒதுக்கவும், நன்கொடை கேட்கப்படுகிறது. இதில், ஆசிரியர்கள் நேரடியாக ஈடுபடாமல், பெற்றோர் - ஆசிரியர் கழக உறுப்பினர்கள் வழியாக வசூலிப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும்படி, அரசு அறிவுறுத்துகிறது. ஆனால், அரசு பள்ளிக்கான பெற்றோர் - ஆசிரியர் கழகத்தில், ஆளும் கட்சியினரும், அவர்களுக்கு வேண்டியவர்களும் தான் உள்ளனர். அவர்கள், மாணவர்களை சேர்க்க, பெற்றோரிடம் நன்கொடை கேட்கின்றனர்; ரசீதும் வழங்குவதில்லை. பணம் கொடுக்காமல், சேர்க்கை அளிப்பதில்லை.
சில இடங்களில் மாற்று சான்றிதழ் வழங்கவும், நன்கொடை கேட்கின்றனர். எனவே, பள்ளிக் கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி, அரசு பள்ளிகளில் பணம் வசூலிப்பதை உடனே நிறுத்த வேண்டும். நன்கொடை உள்பட வேறு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.