சிக்கபல்லாப்பூர்-மனைவியை கொன்று, உடலை வீட்டில் பூட்டிவிட்டு தப்பிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிக்கபல்லாப்பூரின் கவுரிபிதனுார் டவுன் கங்கா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பா, 50. அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி லட்சுமி தேவி, 40. தம்பதிக்கு இரண்டு மகள்கள். மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து, கணவருடன் வசிக்கிறார். இரண்டாவது மகள், பெங்களூரில் படிக்கிறார்.
கிருஷ்ணப்பா, செலவு செய்ய யோசிக்கும் குணம் கொண்டவர். அன்றாட செலவுக்கு கூட மனைவிக்கு பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 19ம் தேதி, மூத்த மகளுக்கு சொத்தை பிரித்து கொடுக்கும்படி, கணவரிடம் மனைவி கூறினார்.
இதனால், இருவர் இடையில் தகராறு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்தனர். கடந்த நான்கு நாட்களாக, கிருஷ்ணப்பாவின் வீடு பூட்டி கிடந்தது. மகளை பார்க்க சென்று இருப்பர் என்று அக்கம்பக்கத்தினர் நினைத்தனர்.
நேற்று காலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தனர். உடல் அழுகிய நிலையில், லட்சுமிதேவி இறந்து கிடந்தார். அவரது தலையில் பலத்த வெட்டு காயம் இருந்தது.
கிருஷ்ணப்பாவின் மொபைல் போனுக்கு போலீசார் அழைத்தனர். ஆனால், அது வீட்டில் தான் இருந்தது. விசாரணையில் சொத்து தகராறில், மனைவியை அரிவாளால் தலையில் வெட்டி கொலை செய்துவிட்டு, வீட்டை வெளிபக்கமாக பூட்டிவிட்டு, கணவர் தலைமறைவானது தெரிந்தது. அவரை போலீசார் தேடுகின்றனர்.