வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அரசு முறைப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, பயணத்தை வெற்றிகரமாக முடித்த நிலையில் இந்தியா வந்து சேர்ந்தார்.
கிழக்காசிய நாடான ஜப்பான், பசிபிக் தீவு நாடுகளான பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு பிரதமர் மோடி அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.
ஜப்பானில் நடந்த, 'ஜி - 7' மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பங்கேற்றார். பின் ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடி, சிட்னியில் மிக பிரமாண்ட விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியினர் இடையே உரையாற்றினார். பயணத்தை நிறைவு செய்த நிலையில், நேற்று(மே 24) மாலை இந்தியா புறப்பட்டார். இன்று காலையில் வந்து சேர்ந்த பிரதமரை டில்லியில் மூத்த அமைச்சர்கள் அதிகாரிகள் வரவேற்றனர்.
தொடர்ந்து பாஜ சார்பில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
நாட்டின் நலனே இலக்கு
ஜி-7 மாநாட்டில் பங்கேற்க சென்ற போது உலக தலைவர்கள் பலரும் என்னை நேரில் சந்தித்து பேசியதை நினைந்து மகிழ்கிறேன். ஜி-20 மாநாடு குறித்தும் அனைவரும் பாராட்டி பேசினர். இது அனைத்து இந்தியர்களுக்கும் கிடைத்த வெற்றி. இந்த சந்திப்பில் எனது முழு நேரத்தையும் இந்தியாவின் பெருமைக்காகவே நாட்டின் நலனுக்காக செலவழித்தேன். கோவிட் காலத்தில் இந்தியா எடுத்த முயற்சிகள் மற்றும் தடுப்பூசியை பலரும் பாராட்டினர். இந்தியா புத்தர் ,காந்தி பிறந்த மண். நாம் எதிரிகளுக்காகவும் கவலைப்படுகிறோம். ஏனெனில் நாம் இரக்கம் கொண்டவர்கள்.
ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியினர் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில், அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கலந்து கொண்டார். அவர் மட்டுமல்லாமல், அந்நாட்டு முன்னாள் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்களும் , அவர்கள் நாட்டின் நலனுக்காக கலந்து கொண்டனர்.
உலகமே இந்தியாவை உற்று நோக்கி கவனிக்கிறது. இந்தியாவின் பெருமையை நினைந்து பார்க்கிறது. இந்திய கலாசாரத்தை உலகம் போற்றுகிறது.என்பதை இந்த வெளிநாட்டு பயணத்தில் உணர முடிந்தது.