நம் உணவில் பிளாஸ்டிக் எப்படியோ புகுந்துவிடுகிறது. உணவுப் பொருட்கள், விளைநிலத்திலிருந்து நம் தட்டுக்கு வருவதற்குள், நுண் பிளாஸ்டிக் துகள்கள், நேனே பிளாஸ்டிக் மூலக்கூறுகள், பிளாஸ்டிக் பிசின்கள் என்று பலதும் கலந்துவிடுகின்றன. அது எப்படி என்பதை பல ஆராய்ச்சிகள் கண்டு சொல்லிவிட்டன. என்றாலும் நுண் பிளாஸ்டிக்குகளால் நமக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகளைப் பற்றிய புரிதல் குறைவு தான்.
உலகெங்கும் சராசரியாக ஒரு நபர், 35 கிலோ பிளாஸ்டிக்கை குப்பையில் போடுகிறார். இந்த பிளாஸ்டிக்குகள் சிதைந்து, மைக்ரோ மற்றும் நேனோ பிளாஸ்டிக் துகள்களாகி, கடல் முதல் பனி மலைச் சிகரம் வரை பரவிவிடுகின்றன.
மனிதன் உண்ணும் விலங்குகளின் இரையில், பிளாஸ்டிக் கலந்தால், அவை மனித உடலுக்குள்ளும் புகுகிறது. தாவரங்களை பறிக்கும்போது இல்லாத பிளாஸ்டிக், நடுவழியில் கையாள்கையில், சேர்கிறது. இந்த பிளாஸ்டிக்குகளால் மனிதன் மற்றும் அருகி வரும் விலங்குகளுக்கு ஏற்படும் தீங்குகளை ஆராயவேண்டும் என விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.