செயற்கை நுண்ணறிவுத் துறையின் முன்னோடிகளுள் ஒன்றான சாட் ஜி.பி.டி.,யை உருவாக்கியது ஓப்பன் ஏ.ஐ., என்ற அமைப்பு. இப்போது, அதே அமைப்பு, முப்பரிமாண டிஜிட்டல் வரைபடத் துறையிலும் செயற்கை நுண்ணறிவை கொண்டுவந்து அசத்தியுள்ளது. ஷேப்-இ ஏ.ஐ., (Shap-E AI) என்ற பெயரில், கணினி உதவியுடனான வடிவமைப்புத் துறையில் நுழைகிறது ஓப்பன் ஏ.ஐ.,
இந்த மென்பொருளுக்கு எழுத்துக்கள் மூலம் கட்டளையிட்டால், அதைப் புரிந்துகொண்டு, நொடிகளில் முப்பரிமாண உருவத்தில் பொருட்களை காட்டிவிடும்.
கட்டடவியல், இயந்திரவியல் போன்ற பல துறைகளில் '3டி கேட்' எனப்படும் முப்பரிமாண வரைபடத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இத்துறைக்கென தனியாகப் பயிற்சி தேவை. ஆனால், ஷேப்-இ ஏ.ஐ., பரவலாகிவிட்டால், எவரும் பேச்சு ஆங்கிலத்தில் விபரங்களைச் சொல்லி, அவற்றை அப்படியே முப்பரிமாணப் படங்களாக துல்லியமாக எடுத்துவிட முடியும். செயற்கை நுண்ணறிவு நுழையாத துறை என்று இனி எதுவுமே இருக்காது போலிருக்கிறது.