வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பார்லிமென்ட் புது கட்டட திறப்பு விழாவை புறக்கணித்து, ஜனநாயகத்திற்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் அவமரியாதை செய்தால், அதனை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என எதிர்க்கட்சிகளுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக 14 கட்சிகள் அடங்கிய தே.ஜ., கூட்டணி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: பார்லிமென்ட் புது கட்டட திறப்பு விழாவில் கலந்து கொள்வது இல்லை என்ற தங்களின் முடிவை எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாறாக தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, ஜனநாயகத்திற்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் அவமானத்தை ஏற்படுத்தினால், அதனை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை வரலாற்றில் எதிரொலிக்கும், தனி மனித அரசியலை லாபத்தை பற்றி சிந்திக்காமல், நாட்டை பற்றி எண்ண வேண்டும்.
பார்லிமென்ட், இந்திய ஜனநாயகத்தின் துடிப்புமிக்க இதயமாக உள்ளது. குடிமக்களின் வாழ்க்கையில் மாற்றத்தையும் ஏற்படுத்தும் வகையிலான கொள்கை முடிவுகள் எடுக்கும் முக்கிய மையமாகவும் பார்லிமென்ட் உள்ளது. இந்த அமைப்பு மீதான எதிர்க்கட்சிகளின் தாக்குதல், ஜனநாயகத்திற்கு செய்யும் அவமரியாதையை காட்டுகிறது.
ஜனாதிபதி தேர்தலின் போது, திரவுபதி முர்முவுக்கு எதிராக வேட்பாளரை களமிறக்கி அவரை அவமரியாதை செய்ததுடன், புதிய கீழ்த்தரமான அரசியலிலும் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டன. தேர்தலில், அவரது வேட்புமனுவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து அவரை அவமானபடுத்தியதுடன் மட்டுமல்லாமல், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை நேரடியாக அவமரியாதை செய்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.