ஆஸ்திரியாவில் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் பிறந்த வீடு, போலீஸ் ஸ்டேஷனுடன், மனித உரிமைகள் குறித்து போலீசாருக்கு பயிற்சியளிக்கும் மையமாக மாற்றப்பட உள்ளது.
ஜெர்மன் சர்வாதிகாரியான அடால்ப் ஹிட்லர், 1889ம் ஆண்டு ஆஸ்திரியாவில் ஜெர்மனி எல்லை அருகே உள்ள வீட்டில் பிறந்தார். ஹிட்லர் பிறந்து சில மாதங்கள் மட்டுமே அங்கு வாழ்ந்தார். இருந்த போதும், நாஜிகளின் ஆட்சியின் போது, புனித இடமாக வணங்கப்பட்டது. ஏராளாமான வலதுசாரி ஆதரவாளர்கள் சுற்றுலாவுக்கு குவிந்தனர். லட்சக்கணக்கான யூதர்களை வதை முகாமில் அடைத்து கொன்ற ஹிட்லர், இரண்டாம் உலக போரில் தோற்ற பின்னர், முக்கியத்துவத்தை இழந்தது.
17ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த வீடு, நீண்ட கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு 2016ம் ஆண்டு அரசால் விலைக்கு வாங்கப்பட்டது. இதனை தற்போது ஒரு காவல் நிலையத்தை உள்ளடக்கிய பயிற்சி மையமாக மாற்றுவதற்கான செலவு சுமார் 20 மில்லியன் யூரோவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
![]()
|
சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வேயில், சோசலிசம், பாசிச எதிர்ப்பு, சகிப்புத்தன்மை மற்றும் அமைதி போன்றவற்றை கையாள்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஸ்தாபனமாக மாற்றப்பட வேண்டும் என்று உள்ளூர் மக்கள் விரும்பினர். பெரும்பான்மையானவர்கள் அதாவது 53 சதவீதம் பேர் அதை காவல் நிலையமாக மாற்றுவதற்கு எதிராக இருப்பதாக தெரிவித்தனர். 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் அதனை இடித்து தரைமட்டமாக்க வேண்டுமெனவும், 6 சதவீதம் பேர் மட்டுமே போலீசார் பயன்படுத்தலாமென கூறியிருந்தனர்.
கோர்ட் உத்தரவை தொடர்ந்து 2011ம் ஆண்டு முதல் ஹிட்லர் பிறந்த வீடு காலியாக இருந்து வருகிறது. அதிகாரிகள் உரிய ஒப்பந்தம் ஏற்படுத்த தவறியதை அடுத்து அதன்
கடைசி உரிமையாளருக்கு இழப்பீடாக 8 லட்சம் யூரோக்களை அரசு அளித்திருந்தது. 2026ம் ஆண்டு, காவல் நிலையத்துடன் கூடிய பயிற்சி மையமாக திறக்கப்படுமென
அறிவிக்கப்பட்டுள்ளது.
2015ல் அங்கு அமைதி, சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காக -மீண்டும் ஒருபோதும் பாசிசம் கூடாது; மில்லியன் கணக்கான மக்களின் மரணங்களை நினைவு கூர்தல் என்ற வாசகத்துடன் கூடிய நினைவுக்கல் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.