உஜ்ஜயினி: ''கணிதத்தின் அல்ஜீப்ரா, ஸ்கொயர் ரூட்ஸ், நேரம் தொடர்பான கணக்குகள், கட்டுமானக் கலை, பிரபஞ்சத்தின் கட்டமைப்பு, விமான அறிவியல், உலோக அறிவியல் எனப் பலவற்றுக்கும் வேதங்களே முன்னோடி'' என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். இவை, அரபு நாடுகள் வாயிலாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று, மேற்குலக விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாக கொடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
ம.பி., மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள மகரிஷி பானினி சமஸ்கிருத மற்றும் வேதிக் பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது: அறிவியல் கோட்பாடுகளின் உண்மையான பிறப்பிடமே வேதங்கள் தான். ஆனால், மேற்குலக படைப்புகள் போல் அவை வேறு போர்வையில் கொடுக்கப்பட்டுள்ளன. கணிதத்தின் அல்ஜீப்ரா, ஸ்கொயர் ரூட்ஸ், நேரம் தொடர்பான கணக்குகள், கட்டுமானக் கலை, பிரபஞ்சத்தின் கட்டமைப்பு, விமான அறிவியல் , உலோக அறிவியல் எனப் பலவற்றிலும் வேதங்களே முன்னோடியாக திகழ்ந்தன.
ஆரம்ப காலத்தில் சமஸ்கிருத மொழிக்கு பேச்சு வழக்கு மட்டுமே இருந்ததால், அதில் சொல்லப்பட்ட அறிவியல் அபகரிக்கப்பட்டு, மேற்குலகின் தத்துவங்கள் போல் கொடுக்கப்பட்டு உள்ளன. பின்னர் தேவநாகிரி எழுத்துரு வந்த பின்னர் சமஸ்கிருத அறிவு செழித்தோங்கியது.
பொறியாளர்களும், விஞ்ஞானிகளும் சமஸ்கிருதத்தை அதிகம் விரும்புகிறார்கள். இது கணினிகளின் மொழிக்கு ஏற்றது. செயற்கை நுண்ணறிவு படித்தவர்கள் சமஸ்கிருதத்தை கற்றுக்கொள்கிறார்கள். கணினியில் சமஸ்கிருதத்தை பயன்படுத்துவது குறித்து அதிக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இந்திய இலக்கியங்கள் வளமானவை. வானியல், மருத்துவம், அறிவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் வானூர்தி அறிவியல் ஆகியவற்றில் கண்டுபிடிப்புகள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டன. ஆனால், அவை முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. ஆய்வு செய்யவில்லை. சமஸ்கிருதத்தில் கலாசாரம், ஆன்மிகம் மற்றும் அறிவியல் படிப்பு என்று எந்தப் பிரிவினையும் இல்லை. இவ்வாறு சோம்நாத் கூறினார்.