பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், நொச்சலி ஊராட்சிக்கு உட்பட்ட திகுவமிட்டூர் கிராமத்தில், 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு இவர்களின் பிரதான தொழில். கால்நடைகளை ஊருக்கு அருகே உள்ள மேய்ச்சல் பகுதிக்கு ஓட்டி செல்கின்றனர்.
மேய்ச்சல் பகுதிக்கு செல்லும் வழியில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், கால்நடை குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இது கால்நடைகளின் தாகம் தீர்க்க உதவி வந்தது.
சில மாதங்களாக, இந்த குடிநீர் தொட்டி முறையாக தண்ணீர் நிரப்பி பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால், கால்நடைகளின் தாகம் தீர்க்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பராமரிப்பு இல்லாத கால்நடை குடிநீர் தொட்டியில் செடி, கொடிகள் முளைத்துள்ளன. இந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து, தண்ணீர் நிரப்ப வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.