திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
வாகனங்கள் மலைக்கோவிலுக்கு செல்ல, திருத்தணி- - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் இருந்து, மலைப்பாதை உள்ளது.
இந்நிலையில், மாதந்தோறும் கிருத்திகை விழா, தொடர் விடுமுறை மற்றும் முக்கிய திருவிழா நாட்களில், மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், மலைக்கோவிலுக்கு செல்லும் இரண்டரை கி.மீ., துாரத்தை கடக்க, பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதையடுத்து, 2006ம் ஆண்டு, இரண்டாவது மலைப்பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த, ஹிந்து சமய அறநிலைத்துறை முடிவு செய்தது.
பின், பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் குழுவினர், மலைக்கோவிலில் இருந்து அமிர்தாபுரம் வரை, இரண்டரை கி.மீ., துாரத்திற்கு, 10 மீட்டர் அகலத்தில் மலைப்பாதை அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர்.
இந்நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், இரண்டாவது மாற்று மலைப்பாதை உள்ள அமிர்தாபுரம், மடம், நல்லணகுண்டா மற்றும் வனப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
மாற்றுப் பாதை திட்டத்திற்கு இடம் கையகப்படுத்துவதில் உள்ள இடர்பாடுகள், நீர்நிலை கள் குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மாற்றுப்பாதை அமைய உள்ள வனத்துறையினருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்திற்கு ஈடாக, திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி பகுதியில், 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாற்றுப்பாதை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.