சென்னை:பட்டினப்பாக்கம், ஸ்ரீனிவாசன் தெருவில் கடந்த 23ம் தேதி இரவு, அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், 20, என்பவர், ஒரு வீட்டிற்குள் புகுந்து துாங்கி கொண்டிருந்த, 11 மாத பெண் குழந்தையிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
அக்கம்பக்கத்தினர் அவரை சுற்றி வளைத்து, சரமாரியாக தாக்கியதோடு ஆத்திரத்தில் முகத்தில் மிளகாய் பொடி துவினர். பின், பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த விக்னேஷை, போலீசார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு விக்னேஷ் தப்பியதாகவும், பட்டினப்பாக்கம் பகுதியில் சுற்றித் திரிந்ததாகவும் கூறப்படுகிறது.
இதை பார்த்து, அதிர்ச்சியடைந்த மக்கள், நள்ளிரவில் மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 'உடனடியாக விக்னேஷை கைது செய்வோம்' என போலீசார் உறுதியளித்தபின், அவர்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'கஞ்சா போதைக்கு அடிமையான விக்னேஷ், சில நாட்களுக்கு முன், மனநலம் குன்றிய, 7 வயது ஆண் குழந்தையிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். போலீசாரின் அலட்சியம் தான் விக்னேஷ் தப்பி செல்ல காரணம்' என்றனர்.