க.ஸ்ரீதர், கல்லிடைக்குறிச்சி, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், கள்ளச்சாராயம் குடித்த, 23 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு, தலா, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளார், முதல்வர் ஸ்டாலின்.
'அரசியல் கட்சிகள், 'பந்த்' நடத்தும் போது, பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால், அந்த சேதங்களுக்கு சம்பந்தப்பட்ட கட்சிகளே பொறுப்பேற்க வேண்டும். அந்த கட்சிகளிடம் இருந்து இழப்பீடு வசூலிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பை கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்திலும், தமிழக அரசு பின்பற்ற வேண்டும்.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நிகழ்ந்த கள்ளச்சாராய பலிகளுக்கு, அவற்றை காய்ச்சி விற்றவர்களும், அவர்களுக்கு துணை போன போலீசாரும், உயர் அதிகாரிகளும் தானே பொறுப்பு. அதனால், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க, சாராயம் விற்றவர்கள் மற்றும் அவற்றை தடுக்கத் தவறிய போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து தான், இழப்பீட்டுத் தொகையை வசூலிக்க வேண்டும்.
'கள்ளச்சாராயம் விற்போர், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவர்' என, அறிவித்துள்ள தமிழக அரசு, சாராய பலிகளுக்கு யார் காரணமோ, அவர்களிடம் இருந்தே இழப்பீடு வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடுவதோடு, அதற்கான சட்டத்தையும் இயற்ற முன்வந்தால், சட்டவிரோத சாராய விற்பனை தானாக முடிவுக்கு வந்து விடும்.
முடிந்தால், கள்ளச்சாராயம் விற்றவர்கள் மற்றும் அவர்களுக்கு துணை போன போலீஸ் அதிகாரிகளின் சொத்துக்களை பறித்து, அவற்றை விற்று, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கலாம்.
மக்களின் வரிப் பணத்தை, அவசியமானவற்றுக்கு மட்டுமே செலவிட வேண்டும். 'அடுத்தவன் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே' என்பது போல, வேண்டுமென்றே தப்பு செய்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வாரி வழங்குவது சரியான அணுகுமுறையல்ல. நிதிப் பற்றாக்குறையில் மாநிலம் தவிக்கும் நிலையில், தேவையற்ற நிவாரணங்களை தவிர்ப்பதே நல்லது.
பா.ஜ., அணுகுமுறை மாற வேண்டும்!
பா.பாலசுப்ரமணியன்,
புதுச்சேரியிலிருந்து எழுதுகிறார்: கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள்
வாயிலாக, பா.ஜ.,வுக்கு மாற்று காங்கிரசே என, தெரிய வந்துள்ளது. ஒருவேளை
தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு சட்டசபை
அமைந்திருந்தால், குமாரசாமியின், மதசார்பற்ற ஜனதா தளம் போன்ற கட்சிகளுக்கு,
'ஜாக்பாட்' அடித்திருக்கும்; நல்லவேளையாக அந்த நிலை உருவாகவில்லை.
மேலும்,
சட்டசபை தேர்தலில், பா.ஜ., தோற்றாலும், மண்ணைக் கவ்வவில்லை; எதிர்க்கட்சி
அந்தஸ்தை பெற்றுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் போன்றோர் சொல்வது போல,
திராவிட நிலப்பரப்பிலிருந்து, பா.ஜ., முற்றிலுமாக அழிக்கப்படவில்லை.
கர்நாடகாவில் மொத்தமுள்ள, 224 தொகுதிகளில், 66ல் வென்று உள்ளது. பல
இடங்களில், மிகக் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தான் காங்கிரசிடம்
தோற்றுள்ளது.
இருந்தாலும், ஆட்சியில் இருந்த பா.ஜ., அதை தக்க
வைத்துக் கொள்ள முடியாமல் போனதற்கு, அதன் அதீத தன்னம்பிக்கையே காரணம்.
இலவசங்களில் தங்கள் கட்சிக்கு நம்பிக்கைஇல்லை என்று, தேர்தல் பிரசாரத்தின்
போது பிரதமர் மோடி வெளிப்படையாகப் பேசியிருக்கக் கூடாது.
ஏனெனில்,
கோடிக்கணக்கான பாமரர்களும், படிப்பறிவு அற்றவர்களும், அப்பாவிகளும் உள்ள
நம் நாட்டில், 'ஏழைகளுக்கு மட்டும் இலவசம் கொடுக்கலாம்...' என, பொருளாதார
நிபுணர்களே கூறுகின்றனர்.
அடுத்ததாக, இஸ்லாமியர் களுக்கான இட
ஒதுக்கீட்டை மாநில பா.ஜ., அரசு ரத்து செய்ததும், அதன் தோல்விக்கு இன்னொரு
காரணமாகி விட்டது. இதிலிருந்து பாடம் கற்று, தேசிய அளவில்,
சிறுபான்மையினரின் நன்மதிப்பை பெற்றால் மட்டுமே, எதிர்வரும் லோக்சபா
தேர்தலை, பா.ஜ., நம்பிக்கையுடன் சந்திக்க முடியும்.
அதேநேரத்தில்,
தோழமை கட்சிகளான தி.மு.க.,வும், காங்கிரசும், தற்போது தமிழகத்திலும்,
கர்நாடகாவிலும் ஆட்சியில் உள்ளதால், இந்தப் பொன்னான வாய்ப்பைப்
பயன்படுத்தி, காவிரி நீர் பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டும்.
இப்படி அறிவியுங்கள் பார்க்கலாம்!
எஸ்.செபஸ்டின்,
சிவகாசி, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்' என, ஆளுங்கட்சியை தவிர,
மற்ற அனைத்துக் கட்சிகளுமே வலியுறுத்தி வருகின்றன.
புதிய தமிழகம்
கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி, 'தி.மு.க., அரசு மதுக்கடைகளை உடனே
மூடவில்லை எனில், அவர்களது ஆட்சியின் காலம் எண்ணப்படும்' என்று
கூறியுள்ளார். பா.ம.க., நிறுவனர் ராமதாசும், மதுக்கடைகள் ஒழிக்கப்பட
வேண்டும் என்பதில், தீவிரமாக உள்ளார்.
இதிலிருந்தே, ஆளுங்கட்சியை
தவிர, மற்ற அனைத்துக் கட்சிகளும், மது என்ற அரக்கனிடமிருந்து, தமிழக
மக்களை காப்பாற்ற போராடுகின்றன என்பது தெளிவாக தெரிகிறது.
உண்மையிலேயே
தமிழக மக்கள் மீதும், அனைத்து குடும்ப பெண்கள் மீதும், மாணவர்கள் மீதும்,
இந்தக் கட்சிகளுக்கு அக்கறை இருக்குமானால், மதுக்கடைகளை மூடுவது குறித்து
அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டிய அவசியமே இல்லை; போராட்டம் நடத்த வேண்டிய
தேவையும் இல்லை...
தமிழகத்தின் மக்கள் தொகை எட்டு கோடி. இதில்,
பெண்கள், சிறுவர்கள் மற்றும் மதுப்பழக்கம் இல்லாத ஆண்கள் என, நான்கு கோடி
பேர் இருப்பர். மீதி நான்கு கோடி பேர் மட்டுமே, மதுப்பழக்கம் உள்ளவர்கள்...
இந்த நான்கு கோடி பேரும், ஏதாவது ஒரு அரசியல் கட்சியை
சேர்ந்தவர்களாகவே இருப்பர். அதனால், ஒவ்வொரு கட்சியின் தலைவரும், தங்கள்
கட்சித் தொண்டர்கள் மது அருந்துதல் கூடாது.
அப்படி அருந்தினால்,
அவர்கள் கட்சியிலிருந்தே துாக்கப்படுவர், அடிப்படை உறுப்பினர்
பொறுப்பிலிருந்து நீக்கப்படுவர் என, அறிவிக்கலாம். உண்மையிலேயே, தலைவரின்
பேச்சை கேட்கும் தொண்டர்களாக இருந்தால், அவர்கள் மது அருந்துவதை நிறுத்தி
விடுவர்.
அதுமட்டுமின்றி, கட்சி கூட்டங்களுக்கு, மாநாடு களுக்கு
ஆட்களை அழைத்து வர, குவார்ட்டர் பாட்டிலும், பிரியாணியும் வாங்கித்
தருவதையும் நிறுத்த வேண்டும். இது மாதிரியான நடவடிக்கைகளை அனைத்து
கட்சியினரும் எடுத்தால், 'டாஸ்மாக்' கடைகளின் விற்பனை முற்றிலுமாக முடங்கி
விடும்.
அதை விடுத்து, மதுக்கடைகளை மூடும்படி, அரசுக்கு கோரிக்கை விடுப்பது, கையில் வெண்ணெயை வைத்து நெய்க்கு அலைவது போலுள்ளது.
கட்சித்
தொண்டர்கள் மது அருந்துவதை தடுக்க, ஒவ்வொரு கட்சியின் தலைவரும்,
துணிச்சலாக இதைச் செய்ய முன்வர வேண்டும்; யோசியுங்கள் தலைவர்களே!