'தேங்க் யூ புட்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வரும், மதுரை சுந்தரம்பட்டியைச் சேர்ந்த அப்துல் ரஹீம்:
ஐ.ஏ.பி., என்ற, 'இந்தியன் அசோசியேஷன் பார் ப்ளைண்ட்ஸ்' நிறுவனத்தை துவக்கியவர் என் தந்தை முகமது அலி ஜின்னா. 13 வயதில் விபத்தில் பார்வையை இழந்த அவர், அமெரிக்காவிலுள்ள பாஸ்ட் நகரில், பார்வையற்றவருக்கான சிறப்பு கல்வியைகற்றார்.
அங்கே கிடைத்த வேலையை வேண்டாம் என்று உதறி விட்டு மதுரைக்கு வந்து,மாற்றுத் திறனாளிகளுக்கென ஒரு தற்சார்புவாழ்வை உருவாக்குவதற்காக, ஐ.ஏ.பி.,யைதுவக்கினார்.
இதன் வாயிலாக, இலவச கல்வி, மருத்துவம், உணவு, தங்குமிடம் தந்து, வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்தார். இதுவரை, 40 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள்சுதந்திரமாக வாழ்வதற்கான பாதை அமைத்து தந்துள்ளார்.
இன்ஜினியரிங் முடித்த நான், ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் வேலை பார்த்தேன். பின், வெளிநாட்டு வேலைவாய்ப்பு வந்தது; அப்பாவை போல நானும் அதை ஏற்கவில்லை. அப்பாவின் மறைவுக்குப் பின், அவரதுபொறுப்பு, கனவுஎன்னிடம் வந்தது.
ரயில் பயணத்தின் போது, மாற்றுத்திறனாளிகள் தின்பண்டங்கள் விற்பனை செய்வதை பார்த்தேன்; அது, மனதைஉறுத்தியது.
'நாம் ஏன் இதை ஒரு பிராண்டாக மாற்றக்கூடாது' என்றஎண்ணம்வந்தது. அதைத் தொடர்ந்து, வீட்டிலேயே குக்கீஸ்கள்தயாரித்து,விற்பனை செய்யத் துவங்கினோம்.
மக்கள் தரும்ஆதரவால் இயங்கிவருவதால், அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக, 'தேங்க் யூ புட்ஸ்' என, நிறுவனத்திற்கு பெயர் வைத்தேன். பள்ளி, கல்லுாரிகள் என, சாலையோரத்தில் ஆரம்பித்த எங்கள் பயணம், பேஸ்புக், கூகுள்நிறுவனங்களின் கேன்டீன் வரை விரிந்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள் பிறரை சாராமல் தற்சார்பு வாழ்வை நடத்த வேண்டும் என்ற, தந்தையின் கனவை ஓரளவேனும் தொட்டு விட்டோம் என்று நாங்கள்நினைக்கையில், கொரோனா ஊரடங்கு மீண்டும் ஒரு இடியாக விழுந்தது.
கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வான பின், thankufoods.com என்ற, இணையதள பக்கம் வாயிலாக, மீண்டும் விற்பனையை துவங்கினோம்.
தலைசிறந்த, 'செப்' களின் பயிற்சியில், மாற்றுத்திறனாளிகளின் வாயிலாக, சிறந்த பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதே எங்கள் நோக்கம். எங்களது தயாரிப்பான, பனைவெல்ல மைசூர்பாகு, இளநீர் அல்வா, மோத்தி லட்டு உள்ளிட்ட பொருட்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைபெற்றுள்ளன.
இப்போது மதுரை, சென்னை, கோவை என, எட்டு இடங்களில் வெற்றிகரமாகச் செயல்படுகிறது; விரைவில், தமிழகமெங்கும் வளரும்.