புதுடில்லி:உலகின் பிற நாடுகளை விட அதிகளவிலான வளர்ச்சிக்கு இந்தியா தயாராகி வருகிறது என்றும், பணவீக்கம் அடுத்த ஆண்டுக்குள் 4 சதவீதமாக குறைந்து விடும் என்றும் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கூறியுள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலை குறித்து அவர் மேலும் கூறியதாவது:
இந்தியாவின் வலுவான கடன் தேவை மற்றும் கச்சா எண்ணெய் விலை குறைவது, நமது பொருளாதாரத்தை, நடப்பு நிதியாண்டில் 6.5 சதவீதமாக அதிகரிக்க வைக்கும்.
மேற்கூறிய விஷயங்களுடன், கட்டுமான துறை எழுச்சியும் இணைந்து ஒரு பாதுகாப்பு அரணாக எழுந்து, உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி சரிவு மற்றும் வானிலை தொடர்பான அபாயம் ஆகியவற்றிலிருந்து, நமது பொருளாதாரத்தை பாதுகாக்கும்.
பொருளாதார ஆய்வில், இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளோம். பருவமழை மற்றும் புவிசார் அரசியல் அபாயங்களைத் தாண்டி, இந்திய பொருளாதாரம், ஒரு நிலையான வளர்ச்சியுடன் பயணிக்கும்.
நடப்புக் கணக்கு பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் அன்னிய செலாவணி இருப்பு ஆகிய அனைத்தும், நாட்டின் வளர்ச்சிக்கான நேர்மறையான அறிகுறிகளையே வழங்குகின்றன. பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும்பட்சத்தில், பணவீக்கம் அடுத்த ஆண்டுக்குள் 4 சதவீதமாக குறைந்துவிடும் என கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
* இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும்
*கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும்பட்சத்தில் பணவீக்கம் 4 சதவீதமாக குறையும்