புதுச்சேரி : அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணை, புதுச்சேரி இளைஞர், வள்ளலாரின் சன்மார்க்க முறையில் திருமணம் செய்து கொண்டார்.
புதுச்சேரி, கோவிந்தசாலை, கல்வே பங்களா வீதியைச் சேர்ந்த தம்பதி கண்ணன் - நோயலின் மகன் அபிலாஷ், 29.தகவல் தொழில்நுட்ப பொறியாளரான இவர், நெதர்லாந்து நாட்டில் பணிபுரிந்து வருகிறார்.
அங்கு சொந்தமாக ஹோட்டலும் நடத்தி வருகிறார்.இவர் எட்டு ஆண்டிற்கு முன் மலேஷியா நாட்டில் கோலாலம்பூரில் பணிபுரிந்தபோது, அங்கு பணிபுரிந்த அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த ஹபி ஜிலேபி - இலத்தாப் கதிஜா என்ற முஸ்லிம் தம்பதியரின்மகள் பாத்திமாஹபி, 29, என்பவரை காதலித்தார்.
அந்த பெண்ணின் பெற்றோரிடம் பேசி, திருமணத்திற்கு ஒப்புதல் பெற்றனர்.இருவருக்கும் நேற்று காலை புதுச்சேரி, புஸ்சி வீதியில் உள்ள எல்லையம்மன் கோவிலில் இரு வீட்டார் முன்னிலையில், வள்ளலாரின் சன்மார்க்க முறையில் திருமணம் நடந்தது.தொடர்ந்து மணமக்கள், தட்டாஞ்சாவடியில் உள்ள சமரச சுத்தசன்மார்க்க சங்கத்தில் வள்ளலாரின் அருட்பா மற்றும் திருக்குறள் நூல்கள் மீது உறுதிமொழி ஏற்றனர்.மணமக்களை பெற்றோர், உறவினர்கள் மற்றும் சமரச சுத்த சன்மார்க்க சங்க நிர்வாகிகள் வாழ்த்தினர்.