திருப்பூர்: திருப்பூரில், மது போதையில் உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறிய வாலிபரை போலீசார் மீட்டனர்.
திருப்பூர், மங்கலம் ரோடு, ஜம்மனை வீதி ஓடையில் உள்ள, 45 அடி உயர் மின்னழுத்த கோபுரத்தில் நேற்று அதிகாலை யாரோ ஒருவர் இருப்பது போன்று தெரிந்தது. இதுகுறித்து பொதுமக்கள் திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற போலீசார் அந்த நபரிடம் விசாரித்தனர். நீண்ட நேரமாக பதில் அளிக்காமல் இருந்தார்.
திருப்பூர் தெற்கு தீயணைப்பு வீரர்கள் வாலிபரிடம் பேச்சு நடத்தி மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், போதையில் இருந்த வாலிபர், தற்கொலை மிரட்டல் விடுத்து, கீழே இறங்க மறுத்தார். இரண்டு மணி நேரம் போராட்டத்துக்கு பின்னே, அவரை கீழே வரவழைத்து, பத்திரமாக மீட்டனர். விசாரணையில், அந்த வாலிபர், பாண்டியன் நகரை சேர்ந்த ரமேஷ், 22 என்பதும், கடந்த, மூன்று ஆண்டுகளாக ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. தங்கை திருமணத்துக்காக மதுரைக்கு சென்றார். நேற்று திருமணம் நடந்துள்ளது.
அப்போது, இவரை குடும்பத்தினர் யாரும் மதிக்காத காரணத்தால், கோபம் அடைந்து, திருப்பூருக்கு கிளம்பி வந்தார். இரவு மது அருந்தி, போதையில் மின் கோபுரத்தில் ஏறியது தெரிந்தது. அவரிடம் திருப்பூர் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர். வாலிபரின் போதை 'அட்ராசிட்டி' காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.